நம் உடலில் ஒவ்வொரு பாகங்களின் செயல்பாடுகளுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். அந்த வகையில் நரம்பு கட்டமைப்பு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஒரு வாசனையை நுகரும்போது அதை உணர்த்துவது முதல் நடப்பது, பேசுவது என ஒவ்வொரு நடவடிக்கையும் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை எளிமையாக புரிந்து கொள்வதைப் போல நரம்பு மண்டலத்தை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள இயலாது.
தலைவலி : நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என்பதற்கான பொதுவான அறிகுறிகளில் ஒன்று தலைவலி ஆகும். உங்கள் கழுத்துக்கு மேலே ஏதேனும் வலியை உணருகின்றீர்கள் என்றால் அது நரம்பு பிரச்சினைக்கான அறிகுறி ஆகும். மைக்ரேன் தலைவலி, டென்ஷன் போன்ற தலைவலி, கொத்தாக ஏற்படுகின்ற வலி போன்றவை நரம்பு பிரச்சினையின் அறிகுறிகள் ஆகும்.
வலி : நரம்பு மண்டலத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் காரணமாக அதீத வலி உண்டாகலாம். Spondylosis, Multiple Sclerosis, Etiology போன்ற பல காரணங்களால் கடுமையான வலி உண்டாகலாம். சில சமயம் fibromyalgia என்னும் பிரச்சினை காரணமாக நீடித்த வலி உண்டாகலாம். இதனுடன் உடல் சோர்வு, தூக்கமின்மை, ஞாபக மறதி, எண்ணம் தடுமாறுவது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இதுபோன்ற பாதிப்புகளை உரிய நேரத்தில் கண்டறிந்து, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
வெர்டிகோ : உடலில் கிறுகிறுவென சுற்றல் உணர்வை ஏற்படுத்தக் கூடிய பிரச்சினைக்கு பெயர் வெர்டிகோ ஆகும். இது பெரிஃபெரல் வெர்டிகோ மற்றும் செண்ட்ரல் வெர்டிகோ என்று இரண்டு வகைப்படும். திடீரென்று தலை சுற்றும், காது கேட்பதில் பிரச்சினை ஏற்படும் மற்றும் வாந்தி எடுக்கலாம். செண்ட்ரல் வெர்டிகோ என்னும் பிரச்சினை ஏற்பட்டால் பார்வை இழப்பு ஏற்படும், உடல் பாகங்கள் மரத்துப் போகும். சிலருக்கு ஸ்டிரோக் பாதிப்பில் முடியலாம்.
பலவீனம் : ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகள் நமக்கு அவசியமானதாகும். உடலில் ஏந்த இடத்தில் பலவீனம் தோன்றினாலும் அது பிரச்சினையின் அறிகுறி ஆகும். இதுபோன்ற பலவீனத்தை வாதம் எனக் குறிப்பிடுகின்றனர். முகத்தில் சிலருக்கு பலவீனம் ஏற்படலாம். சிலருக்கு ஒரு பக்க உடல் செயலிழந்து போகலாம். சிலருக்கு இரண்டு கால்களும் செயலிழந்து போகலாம். திடீரென்று உடல் பலவீனம் அடைவது ஸ்டிரோக் பிரச்சினையின் அறிகுறி ஆகும். நிரந்தர உடல் செயலிழப்பை தவிர்க்க உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது கட்டாயமாகும்.
ஞாபகம் இழப்பது : பெரியவர்களுக்கு ஏற்படக் கூடிய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று ஞாபக இழப்பு ஆகும். நிதி விவகாரங்களில் குழப்பம், தினசரி வாழ்க்கை திட்டமிடலில் தடுமாற்றம், குடும்பத்தில் நெருங்கிய உறவுகளின் அடையாளம் மற்றும் பெயர் மறந்து போவது, பேசுவதில் தடுமாற்றம் போன்றவை பொதுவான பிரச்சினை ஆகும். இதற்கு நரம்பியல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.