நமது குரல்வளையின் மீது ஏற்படக் கூடிய அழற்சிக்கு பெயர் laryngitis என்று குறிப்பிடப்படுகிறது. குரல்வளையை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற வலி, எரிச்சல் அல்லது நோய்த்தொற்று என்று கூட இதனை குறிப்பிடலாம். தசை, குறுத்தெலும்பு ஆகியவற்றை கவர் செய்திருக்கும் வோக்கல் கார்ட்ஸ் பகுதியான அழற்சியால் சூழப்பட்டிருக்கும்.
அறிகுறிகள் : குரல்வளை அழற்சியின் அறிகுறிகள் அல்லது தொந்தரவுகள் என்பது ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திற்கு நீடிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்சினை ஏற்படுபவர்களுக்கு குரல் வளம் பலவீனம் அடையும் அல்லது குரல் இழப்பு கூட ஏற்படலாம். கரகரப்பான தொண்டை, வறட்சியான தொண்டை, வறட்டு இருமல், மூச்சுத்திணறல், இருமலுடன் ரத்தம், அதிக காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, பேச்சு குழறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
குரல்வளை அழற்சிக்கான காரணங்கள் : ஜலதோஷம், காய்ச்சல், புகைப்பிடித்தல், சைனஸ், ஆசிட் ரிஃப்ளெக்ஸ், தொண்டையில் காயம் போன்ற காரணங்களால் குரல்வளை அழற்சி ஏற்படலாம். குரலுக்கு அதிக வேலை கொடுப்பவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படும். உதாரணத்திற்கு மேடை பேச்சாளர்கள், பாடகர்கள், வியாபாரம், கல்வி கற்பித்தல் போன்ற தேவைகளுக்காக பேசிக் கொண்டே இருப்பவர்கள் போன்றோருக்கு இந்தப் பிரச்சினை ஏற்படும்.
சிகிச்சை முறை என்ன? கார்டிகோஸ்டிராய்ட்ஸ் மருந்துகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இது தொண்டை பகுதியில் உள்ள அழற்சி அல்லது வீக்கத்தை குறைக்கிறது. பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பின் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர். மிகுந்த, நீடித்த வலி கொண்டவர்களுக்கு வலி நிவாரண மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்றி இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.
உங்கள் குரல் வளத்தை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து குரல் வளம் சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை மற்றும் பயிற்சி பெறலாம். உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் மற்றும் பானங்களை அருந்துங்கள். அவ்வபோது உப்புதண்ணீரில் வாய் கொப்பளித்தால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வறட்சியான, புகை மண்டலம் சூழ்ந்த, தூசு படிந்த அறைகளில் இருக்கக் கூடாது. புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதனை கட்டாயம் கைவிட வேண்டும். தொடர்ச்சியாக பேசும் பட்சத்தில் இடையிடையே தண்ணீர் அருந்த வேண்டும். குளிர்ச்சியான பானங்கள் மற்றும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.