அதே சமயம் ஊட்டச்சத்து, மினரல்கள் உள்பட பல விஷயங்களை ஆராய்ந்து எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும், எந்த நேரத்தில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று நேர்த்தியாக செய்கின்ற டயட் திட்டங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த கீடோ டயட் (Keto Diet) திட்டமாகும். கீடோ டயட் திட்டம் என்றால் மாவுச்சத்து உணவுகளை குறைத்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டது.
இன்சுலின் அளவை குறைக்கும் : அதிக மாவுச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடும்போது உங்கள் ரத்த சர்க்கரை அளவு பெருமளவு அதிகரிக்கிறது. இதுபோன்ற சமயத்தில் உங்கள் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இன்சுலின் முயற்சி செய்யும். அத்துடன் உங்கள் செல்களுக்கு தேவையான ஆற்றலை பெற குளூகோஸ் அனுப்பும். கீடோ டயட் திட்டத்தில் கொழுப்புகளே உங்களுக்கான ஆற்றலை வழங்கி விடுவதால் இன்சுலின் அளவு குறையும்.
ஹார்மோன் சமநிலை : கீடோ டயட் திட்டத்தால் ஹார்மோன்கள் சீரான நிலையில் இருக்கும். குறிப்பாக, பசி உணர்வை கட்டுப்படுத்தி, இனி உணவு போதும் என்று உங்கள் மூளை உத்தரவிடுவதற்கு காரணமான லெப்டின் என்ற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். பசி உணர்வு கட்டுப்பட்டால் ஸ்நாக்ஸ், துரித உணவுகளை சாப்பிடும் வேட்கை மட்டுப்படும்.
அழற்சி குறையும் : உடல் பருமன், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக அமைவது அழற்சி ஆகும். எந்தெந்த உணவுகளில் சர்க்கரை சத்து மிகுதியாக இருக்கிறதோ, அதில் அழற்சிக்கான பண்புகள் அதிகமாகும். ஆனால், கீடோ டயட் திட்டத்தில் நீங்கள் சர்க்கரை குறைவான உணவுகளை எடுத்துக் கொள்வீர்கள் மற்றும் மாவுச்சத்தை முற்றாக தவிர்ப்பீர்கள்.
உடல் எடை குறையும் : கீட்டோ டயட்டால் உங்கள் உடலில் மெட்டபாலிச நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும் அதே சமயத்தில் பசியுணர்வு பெருமளவில் கட்டுக்குள் வரும். இதனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற உங்கள் நோக்கம் எளிதில் நிறைவேறும். கீடோ டயட் திட்டத்தை ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவ வல்லுநரின் ஆலோசனையின் பேரில் பின்பற்ற வேண்டும். முறைப்படி கடைபிடித்தால் மட்டுமே உரிய பலன்கள் கிடைக்கும்.