தைராய்டு ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறை விளைவுகள், எடை அதிகரிப்பு, எலும்பு பலவீனம் மற்றும் முடி உதிர்வு, இதய நோய், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, நீரிழிவு போன்ற பல சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே, நமது தைராய்டு ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். தைராய்டு ஹார்மோன்ஸ் குறைந்த அளவு சுரப்பது ஹைப்போதைராய்டிசம் என்றும் அதிகம் சுரப்பது ஹைப்பர் தைராய்டிசம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
தைராய்டு போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத ஹைப்போ தைராய்டிசம் நிலை திடீர் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. ஹைப்போ தைராய்டிசம் குழந்தைகள் உட்பட எந்த வயதினரையும் பாதிக்கலாம். தைராய்டு குறைபாடு இருந்தால் அதிக சோர்வு, மலச்சிக்கல், முக வீக்கம் மற்றும் வறண்ட சருமம், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது, மூட்டுகளில் விறைப்பு அல்லது வலி, குளிரும் உணர்வு உள்ளிட்ட பல அறிகுறிகளை ஒருவர் உணரலாம். சரியான உணவுமுறை மாற்றங்களை பின்பற்றினாலும் கூட ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்படுவோர் உடல் எடையை குறைக்க பெரும்பாலும் சிரமப்படுவார்கள். எனினும் எடை மற்றும் ஆரோக்கியத்தை சிறப்பாக நிர்வகிக்க உணவு மற்றும் வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்தினால் எதிர்பார்க்கும் முடிவுகளை பெறலாம்.
தைராய்டு ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சேர்க்கும் முயற்சியில் அளவாக உணவுகளை எடுத்து கொள்வதன் மூலமும், பல வகை உணவு குழுக்களின் மூலம் அயோடின், செலினியம், ஜிங்க், கால்சியம் மற்றும் புரோட்டின் உள்ளிட்ட பாதுகாப்பான முக்கிய இயற்கை ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை சீராக டயட்டில் சேர்த்து கொள்வதன் மூலமும் உணவு தேர்வுகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். தைராய்டு செயல்பாட்டிற்கு அவசியமான முக்கிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகள் இங்கே..
சீட்ஸ் & நட்ஸ் : செலினியம் மற்றும் ஜிங்க்-கின் சிறந்த மூலமாக இருக்கிறது பிரேசில் நட்ஸ். இது தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட உதவுகிறது. சியா மற்றும் பூசணி விதைகள் ஜிங்க் சத்தின் வளமான ஆதாரங்கள். இது ஒரு சிறந்த ஸ்னாக்ஸ் ஆப்ஷனாக இருக்கிறது. தைராய்டு நோயாளிகளிடையே பொதுவாக காணப்படும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை ஆயில் சீட்ஸ் மற்றும் நட்ஸ்களை எடுப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். எடை இழப்பிற்கும் உதவுகின்றன.
ஹைப்போ தைராய்டிசத்திலிருந்து மீள்வது கடினமான ஒன்று அல்ல. ஆனால் இதற்கான உரிய சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடுவது ஹை கொலஸ்ட்ரால் லெவல், இதய நோய், மலட்டுத்தன்மை மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற சிக்கலை ஏற்படுத்தி உடலை கடுமையாக பாதிக்கும். தைராய்டு சிக்கல் நீரிழிவு, ஆர்த்ரைடிஸ் மற்றும் ரத்த சோகை போன்ற பிற தன்னுடல் தாக்க நோய்கள் ஏற்பட வழிவகுக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே துவக்கத்திலேயே நோயை கண்டறிவது மற்றும் சரியான சிகிச்சை எடுப்பது கூடுதல் சிக்கல்களை தவிர்க்க உதவும். ஆரோக்கியமான டயட்டுடன் யோகா போன்ற உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நோயாளிகளின் நாளமில்லா அமைப்பை தூண்டுகிறது மற்றும் உடலில் ஆக்ஸிஜன் விநியோகம் அதிகரிக்கிறது. இது தைராய்டு சிக்கலுக்கு பெரிதும் உதவும். புகை அல்லது குடி பழக்கம் இருந்தால் அதை முற்றிலும் தவிர்ப்பது பாதிக்கப்பட்டவர்களின் தைராய்டு செயல்திறனை மேம்படுத்த உதவும்.
காலை தைராய்டு மருந்துகளை எடுத்து கொள்ளும் நேரத்தில் சாப்பிடும் உணவுகளிலும் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும். காபி, சோயா, பப்பாளி, திராட்சை, நார்ச்சத்து மற்றும் கால்சியம் கொண்ட சப்ளிமெண்ட்ஸ் போன்றவற்றை காலை எழுந்தவுடன் உடனடியாக சாப்பிடுவதை தைராய்டு நோயாளிகள் தவிர்க்கவும். பேக் செய்யப்பட்ட உணவுகளில் என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதற்கான லேபிள்களைப் கவனமாக படிக்கவும். டயட்டில் அயோடைஸ் உப்பு, முளைகட்டிய தினைகளை சேர்க்கவும். அதே போல தைராய்டு ஆரோக்கியத்தை பராமரிக்க அயோடின் இல்லாத பிங்க் சால்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
கோய்ட்ரோஜன்கள் அதிகம் உள்ள முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, காலே, பீனட் ஆயில் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்ப்பதை கட்டுப்படுத்துங்கள். ஆனால் ஆன்டிஆக்சிடன்ட்ஸ்அல்லது புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் மூலத்தைக் கொண்டிருப்பதால் இவற்றை முற்றிலும் தவிர்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கவில்லை.