பீர் பிரியரா நீங்கள்? தினமும் குடிப்பவரா..? அப்போ நீங்கதான் இதை படிக்கவேண்டும்..
Web Desk | January 21, 2021, 2:13 PM IST
1/ 9
பார்டி, கொண்டாட்டம் என்றால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் முதல் தேர்வு பீராக இருக்கிறது. கடினமான வேலையால் உடல் சோர்ந்து இருக்கும்போது, பிரச்சனைகளால் மனம் துவண்டு அழுத்தத்தில் இருக்கும்போது, அதில் இருந்து விடுபட பீரை குடிக்கின்றனர். ஒரு கூலிங்கான பீரை எடுத்து ஓபன் செய்யும்போது, அதில் இருந்து வெளிபடும் வாசத்தை முகர்ந்து பார்த்து ஆனந்தம் அடைபவர்கள் ஏராளம்.
2/ 9
5 முதல் 12 விழுக்காடு ஆல்கஹால் மட்டுமே இருப்பதால் மற்ற ஆல்கஹால்களை ஒப்பிடும்போது இதனால் ஏற்படும் விளைவுகள் குறைவு. மேலும், பீர் (Beer) குடிப்பதால் உடல் வலி மற்றும் இதய நோய்கள் குறைவதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதற்கு ஏற்ப நாள்தோறும் பீர் குடிப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
3/ 9
தொப்பை உருவாகும் : பீரில் (Beer) குறைவான ஆல்கஹால் இருந்தாலும், அதிகப்படியான கலோரிகள் இருக்கின்றன. ஒரு பின்ட் பீரில் மட்டும் ஏறத்தாழ 150 கலோரிகள் இருக்கிறது. இதனுடன் ஆல்கஹாலை எடுக்கும்போது அல்லது மற்றொரு பீரை சாப்பிடும்போது கலோரி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. பார்டிகளில் பீர் சாப்பிடுபவர்கள், மற்றவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட பீர்களை குடிக்கின்றனர்.
4/ 9
உணவுகளில் உள்ள கலோரிகளுக்கும், ஆல்கஹாலில் உள்ள கலோரிகளுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. ஆல்கஹாலில் இருக்கும் கலோரிகள் அடிவயிற்றில் தங்கி, கொழுப்புகளை உருவாக்கி தொப்பையை ஏற்படுத்துகின்றன. இது மிகவும் ஆபத்தானது என்பதால், பீர் குடிக்க விரும்புவோர் மிக மிக குறைவான கலோரிகள் இருப்பதை தேர்தெடுப்பது நல்லது.
5/ 9
இதயத்துக்கு ஆபத்து : இதய பிரச்சனைகளை குறைக்கும் என மேலே குறிப்பிட்டு, இங்கு இதயத்துக்கு ஆபத்து என கூறுவது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், அதிகமாக பீர் குடித்தால் இதய பிரச்சனைகள் ஏற்படும் என்பதும் உண்மை. அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும்போது உங்களின் இதய தசைகள் பாதிக்கப்படும்.
6/ 9
இதனால், பக்கவாதம் (Storke), உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure), 2வது வகையான நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படும். நாள்நோறும் குடிப்பவர்களைக் காட்டிலும், வாரம் இருமுறை பீர் குடிப்பவர்களுக்கு இன்னும் ஆபத்து அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், திடீரென ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் அவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
7/ 9
கிட்னி பாதிப்பு : ஒரு நாளைக்கு இரண்டு சிப் பீர், பெண்களுக்கு ஒரு சிப் பீர் எடுத்துக்கொள்வது மிதமான குடிப்பழக்கம் ஆகும். இரண்டு என்பது இரண்டு பீர்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதற்கு மீறி நாள்தோறும் பீர் குடிப்பவர்கள் பக்கவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். அவர்களுக்கு கிட்னி பிரச்சனைகள், ஹைபர்டென்சன் ஆகிய பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்புள்ளது. பீர் டையூரிடிக் பானம் என்பதால் சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடம்பில் நீரிழப்பு ஏற்பட்டு, உடல் நிலைத்தன்மையை குலைக்கிறது. மேலும், பீரை வழக்கமாக அருந்துபவர்களுக்கு கிட்னியில் கல் உருவாகும் மற்றும் கிட்னி செயலிழப்பு பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
8/ 9
வைட்டமின் பற்றாக்குறை : நாள்தோறும் பீர் அருந்துபவர்களுக்கு வைட்டமின் மற்றும் தாதுபொருட்கள் பற்றாக்குறை உடலில் ஏற்படும். அதனை கண்டறிந்து உடலுக்கு தேவையான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆல்கஹாலை மெட்டபாலைஸ் செய்ய (metabolise) கூடுதலாக வைட்டமின் பி தேவைப்படுகிறது. இதனால், அதிகம் பீர் சாப்பிடுபவர்களின் உடம்பில் வைட்டமின் பி பற்றாக்குறை ஏற்படும். உடலுக்கு தேவையான வைட்டமின்கள் அன்றாட உணவில் நமக்குபோதுமான அளவில் கிடைக்கும்போதும், அவை உடலுக்கு உறிஞ்சுவதற்கு, உடற்பயிற்சி செய்ய வேண்டும். வைட்டமின் குறைபாடு தொடர்ந்து ஏற்பட்டால், உடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
9/ 9
தூக்கத்தில் பாதிப்பு : இரவு நேரத்தில் ஆல்கஹால் எடுத்துக்கொண்டால், நிம்மதியான தூக்கம் கிடைக்காது. சில ஆய்வுகள் பீர் குடித்தால் விரைவாக தூங்கலாம் என கூறினாலும், இந்த செயல்முறை நீண்ட காலத்துக்கு உதவாது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆல்கஹால் எடுத்துக்கொண்டபிறகு ஒருவர் விரைவாக தூங்கினாலும் 90 நிமிடங்களுக்குப் பிறகு தூக்கம் தெளிந்துவிடும். பின்னர் ஒருவித மயகத்திலேயே இருக்க நேரிடும் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், கடுமையான சோர்வும் ஏற்படும் என கூறியுள்ளனர். ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் ஒருவரின் தூக்கமும், மனநிலையும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். அளவுக்கு அதிமாக மது அருந்துபவர்கள் தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.