சிலர் வீட்டில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் மிகவும் ஹைஜீனிக்காக இருப்பார்கள். எதை தொட்டாலும் சரி, தொடாவிட்டாலும் சரி குறிப்பிட்ட இடைவெளியில் கைகளை அவ்வப்போது சானிடைசர், சோப்பு அல்லது ஹேண்ட் வாஷ் போட்டு கழுவி கொண்டே இருப்பார்கள். அவர்களை நாம் விசித்திரமாக பார்த்திருப்போம். ஆனால் கொரோனா தாக்கத்திற்கு பின்னர் இப்போது உலகமே சானிடைசர் மயமாகிவிட்டது. ஒரு சிலர் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு சரியாக கைகளை சுத்தம் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.
நோய் உண்டாக்கும் பழக்கம் : பொதுவாக ஆயிரக்கணக்கான நோய் கிருமிகளுக்கு இனப்பெருக்க இடமாக இருக்கின்றன வீடுகளில் உள்ள வாஷ்ரூம்கள். நீங்கள் அலுவலகம் அல்லது மால்கள் என வெளியே செல்லும் இடங்களில் உள்ள பொது கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது இன்னும் மோசமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் யார் எதை தொட்டார்கள் என்பது தெரியாது.
எனவே கழிப்பறையை பயன்படுத்திய பின் சரியாக கைகளை கழுவாமல் விட்டால், வாஷ்ரூம் கிருமிகள் உங்கள் கையிலிருந்து நீங்கள் எதை தொட்டாலும் உதாரணமாக கணினி, மொபைல் என அதற்கு மாறும். இந்த பழக்கம் லேசான குடல் தொற்று முதல் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வரை எந்த நோய் வேண்டுமானாலும் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் கழிப்பறை போய்விட்டு சரியாக கைகளை கழுவாமல் சாப்பிடுவதற்கு முன் கைகளை கழுவினாலும் போதாது.
சரும சேதம் : நமது தோல் பகுதி சூப்பர் சென்சிட்டிவ் திறன் கொண்டது. கழிப்பறை சென்று விட்டு கைகளை சரியாக கிருமி நீக்கம் செய்யாமல் சருமத்தைத் தொடும் போது, தோல் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம். இந்த பழக்கத்தால் தோல் வெடிப்பு, பருக்கள் மற்றும் தோல் எரிச்சல் உள்ளிட்ட ஏராளமான சரும பிரச்சனைகள் ஏற்படும்.