உணவு, நீர் போல மனிதன் உயிர் வாழுவதற்கான அத்தியாவசிய தேவைகளில் ஒன்று தூக்கம் ஆகும். நாளொன்றுக்கு மிக குறைந்தபட்சமாக 6 மணி நேரம் தூங்க தவறுகின்ற மனிதனுக்கு, நாளடைவில் சகல விதமான உடல் உபாதைகள் ஏற்படுவது உறுதி. சில சமயம் உயிரிழப்பு ஏற்பட்டால் ஆச்சரியம் இல்லை. அதே சமயம், நாளொன்றுக்கு 8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரையில் தூங்குவது ஆரோக்கியமான நிலையாகக் கருதப்படுகிறது.
ஒரு பக்கமாக உறங்குவது : ஒரு பக்கமாக தூங்குவதே சிறப்பான பொசிஷன் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தூங்குவதால் குறட்டை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். தூக்கத்தின் தரம் மேம்படும் மற்றும் செரிமானம் அதிகரிக்கும். ஒரு பக்கமாக தூங்குவதில், இடதுபக்கமாக தூங்கினால் தான் இன்னும் பலன் அதிகம். ஏனென்றால் இப்படி தூங்கும்போது செரிமானத்திற்காக உள்ள ஆசிட் நமது உணவுக் குழாய் நோக்கி வராது. அதேபோல, கர்ப்பிணி பெண்கள் இடது பக்கமாக தூங்கினால் குழந்தைகளின் நலனுக்கு நல்லது.
வயிறு அழுந்துமாறு தூங்குவது : நம்மூர் மொழியில் சொல்வது என்றால் குப்புற படுத்து தூங்குவது. சோர்வாக இருக்கின்ற எந்தவொரு நபரும் இந்த பொசிஷனை தான் தேர்வு செய்கின்றனர். ஆனால், பெரும்பாலும் இந்த பொசிஷனை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குப்புற படுத்து உறங்குவதால் உடலுக்குள் காற்று செல்கின்ற வழித்தடம் குறையத் தொடங்கும். நாளடைவில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
முதுகு பக்கமாக தூங்குவது : முதுகு பக்கமாக, அதாவது மல்லாக்க படுத்து தூங்குவதால் பெரிய அளவுக்கு தவறொன்றும் இல்லை. ஆனால், உங்கள் முதுகு நேராக இருக்கும் அளவுக்கு உள்ள மெத்தைகளை பயன்படுத்த வேண்டும். எனினும் குறட்டை பிரச்சினை அல்லது தூக்கமின்மை பிரச்சினையால் அவதி அடைபவர்கள் இந்த பொசிஷனை தவிர்க்க வேண்டும்.
குழந்தை போல சுருண்டு படுப்பது : உலகில் உள்ள 47 சதவீத மக்கள், குறிப்பாக பெண்கள் இவ்வாறு சுருண்டு படுத்து தூங்குவதையே விரும்புகின்றனர். இளம் வயதினர் இப்படி தூங்கினால் பிரச்சினை இல்லை. ஆனால், பெரியவர்கள் இப்படி தூங்கினால் நரம்புகளில் ரத்த ஓட்டம் தடைபட்டு, கை, கால்கள் மரத்துப் போகலாம். ஆகவே, கை, கால்கள், மணிக்கட்டு போன்ற பகுதிகளை இறுக்கமாக வைத்துக் கொள்ள கூடாது.