தீ விபத்து என்ற வார்த்தையை கேட்டாலே நம்மை அறியாமலே ஒருவித அச்சம் ஏற்படும். சிலிண்டர் வெடிப்பு, பட்டாசு ஆலை விபத்து, தொழிற்சாலைகளில் மின் கசிவு என தீக்காயங்களின் வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த விபத்துக்கள் சில நேரங்களில் மிகுந்தப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையும். இதோடு காயங்களின் தீவிரத்தைப் பொறுத்து முதல், இரண்டாம், மூன்றாம் நிலை என வகைப்படுத்தப்படுகிறது.
முதல் நிலையில் ஓரளவிற்கு தப்பித்து விடலாம் மற்ற இரண்டு நிலைகளில் ஏற்படும் தீக்காயங்கள் பெரும் சேதத்தை நமக்கு ஏற்படுத்தும். சில சமயங்களில் மரணத்திற்குகூட வழிவகுக்கும். குறிப்பாக ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1,80,000 மரணங்கள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
தீ விபத்திற்கான சிகிச்சை முறைகள்… பொதுவாக தீக்காயங்கள் நமக்கு மிகவும் வேதனை அளிப்பதோடு, குணமாவதற்கு பல நாட்கள் எடுக்கும். தீக்காய களிம்புகள் பயன்படுத்துவதில் தொடங்கி கடுமையான சேதங்கள் ஏற்பட்டால் தோல் மாற்று அறுவை சிகிச்சை வரை தற்போது சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதும் நாளுக்கு நாள் மருத்துவ உலகில் மிகுந்த சேதத்தை விளைவிக்கும் தீ விபத்திற்கு ஸ்டெம் செல் சிகிச்சையைப் பயன்படுத்தலாம் என்கிறது கடந்த 2020 ஆம் ஆணடு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்.
ஸ்டெம் செல் சிகிச்சை முறைகள்… ஸ்டெம் செல்கள் என்பது நம்முடைய எலும்பு மஜ்ஜை அல்லது தொப்புள் கொடியிலிருந்து பெறப்பட்ட செல்களாகும். உடல் செல்களில் அல்லது திசுக்களில் குறைபாடு அல்லது நோய் ஏற்படும் போது, அங்கு ஸ்டெம் செல்களைப் புகுத்தி, புத்துயிர் ஊட்டி, மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் சிகிச்சையாக இது பார்க்கப்படுகிறது. மேலும் உடலின் மூலப்பொருள்கள் என்பதால், உடலின் பிற உயிரணுக்களின் உருவாக்கத்திற்கும் வழிவகுக்கும். இதனால் தான் தீக்காயங்களுக்கு திசுக்களை சரி செய்து காயங்களைக் குணப்படுத்துவதற்கு உதவியாக உள்ளது.
தோல் ஓட்டுதல் சிகிச்சை.. தீ விபத்தினால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தோல் ஓட்டுதல் சிகிச்சை முறையும் மருத்துவத்துறை பின்பற்றி வருகிறது. உங்களது உடம்பில் அதிகளவில் ஏற்படும் காயங்களைச் சரிசெய்வதற்கு ஆரோக்கியமான தோலின் ஒருபகுதியை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படுகிறது. ஒரு வேளை தீக்காயங்கள் காரணமாக உங்களது முகம் அல்லது வேறு எந்தப் பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டால் நோயாளிக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எனவே இனி தீக்காயங்கள் ஏற்பட்டால் இனி எந்த கவலையும் கொள்ள வேண்டாம். பல சிகிச்சை முறைகள் உள்ளதால் எவ்வித அச்சமும் நீங்கள் கொள்ளத் தேவையில்லை. உங்களது உடம்பிற்கு ஏற்றவாறு உள்ள சிகிச்சை முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.