உடல் பருமன் உள்ளோர் எடையை குறைக்க முயற்சிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால் அல்லது தடைகளில் ஒன்று பசி. எதை பற்றியும் யோசிக்காமல் நன்றாக சாப்பிட்டு கொண்டிருந்த ஒருவர் ஆரோக்கியமான உணவை உண்ணவும், குறைவான கலோரிகளை எடுத்து கொள்ளவும் முயற்சிக்கும் போது பசி ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எடை இழப்பு பயணத்தின் போது பசி அல்லது ஆசையை கட்டுப்படுத்த, நொறுக்கு தீனிகளில் இருந்து விலகி இருக்க, சமச்சீரான டயட்டை பேண சில எளிய வழிகள் உள்ளன. அவற்றை பற்றி தற்போது பார்க்கலாம்.
போதுமான அளவு தூங்க வேண்டும்: இரவு நேரத்தில் போதுமான தூக்கம் பெறா விட்டால் அடுத்த நாள் உங்களுக்கு எரிச்சலாக மற்றும் சோர்வாக இருக்கும். இவை பசியை அதிகப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன. இரவு சரியாக தூங்காமல் அடுத்த நாளை துவக்கும் போது நீங்கள் எப்போதாவது இயல்பை விட அதிக பசி உணர்வுடன் இருந்திருக்கிறீர்களா.? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சரியாக தூங்காமல் இருப்பது கிரெலின் என்ற ஹார்மோனை உயர்த்தி, பசியை அடக்கும் லெப்டின் ஹார்மோனைக் குறைக்கிறது. இதுவே உங்கள் பசியை தூக்கமின்மை அதிகரிக்க காரணம் ஆகும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் : நீரிழப்பு உடலில் சோர்வை உருவாக்குகிறது. மேலும் உங்கள் உடலுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை பற்றிய தவறான புரிதலுடன் சோர்வானது பசியை தூண்டுகிறது. நீரிழப்பால் ஏற்படும் சோர்வானது தூக்கமின்மை ஏற்படுத்தும் விளைவுகள் போன்றது. அந்த நேரத்தில் உடல் ஆற்றலுக்காக ஏங்கும். எனவே எடை இழப்பு பயணத்தில் இருக்கும் போது புசிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால் உடனடியாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு 10 நிமிடங்கள் காத்திருக்கவும். நீங்கள் கண்டிப்பாக மாற்றத்தை உணர்வீர்கள்.
மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்: மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்கள் உடல் அதிக கார்டிசோலை (மன அழுத்த ஹார்மோன்) உற்பத்தி செய்கிறது. கார்டிசோல் இன்சுலினை அடக்கும் போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது ரத்த குளுக்கோஸ் செல்களை சென்றடைவதை நிறுத்துகிறது. இதனால் உடலின் செல்கள் பசியுடன் இருக்கும். இதன் விளைவாக நீங்களும் அதிக பசியை உணர்வீர்கள். எனவே மன அழுத்தத்தை நிர்வகிப்பது எடை இழப்பில் முக்கிய பங்காக இருக்கிறது.
காலை உணவை ஒருபோதும் தவிர்க்க கூடாது : ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, நாளின் பிற்பகுதியில் பசியைக் குறைப்பதன் மூலம் காலை உணவு உங்களுக்கு அந்த நாளுக்கான நல்ல தொடக்கத்தை அளிக்கிறது. எனவே எக்காரணம் கொண்டும் காலை உணவை தவிர்க்க கூடாது. அதே போல காலை உணவில், எந்த வடிவத்திலாவது முட்டைகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஏனெனில் முட்டைகள் புரதத்தின் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது.