உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை உலக அளவில் மிகப்பெரிய குறைபாடாக மாறி வருகிறது. அவசரமாக இயங்கும் உலகம், ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பு இல்லாமை, ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும் ஒரு சிலரின் உடல் அமைப்பு மற்றும் உடலின் வளர்சிதை மாற்றம் எவ்வாறு இயங்குகிறது ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாதது. அதாவது உடலின் மெட்டபாலிசம் வேகமாக இருந்தால் நீங்கள் உண்ணும் உணவில் இருக்கும் கலோரிகள் விரைவாக எரிக்கப்பட்டு உடலில் கலோரிகள் சேராமல் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
ஒவ்வொருவரின் உடலின் வளர்சிதை மாற்றமும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வளர்சிதை மாற்றம் வேகமாக செயல்படவில்லை எனும் பட்சத்தில் அதிக கலோரிகள் சேகரிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு மெட்டபாலிசம் குறைபாடு என்பது மரபு நோயாக வருகிறது. எனவே, எடை குறைப்பதற்கு எந்த வகையான முயற்சிகளை செய்தாலுமே உடலில் வளர்சிதை மாற்றம் துரிதமாக வேலை செய்தால் தான் உண்ணும் உணவின் ஆற்றல் எரிக்கப்பட்டு எடை அதிகரிக்காமல் இருக்கும். உடலின் மெட்டபாலிசத்தை எளிமையாக அதிகரிக்க உதவும் மூன்று எளிமையான வழிமுறைகள் இங்கே.
தெர்மிக் விளைவு அதிகரிக்க அதிக புரதம் சாப்பிட்ட வேண்டும் :
உணவை சாப்பிடும் பொழுது, உணவை செரிமானம் செய்யும் போது, உணவை உடலில் சேகரிக்கும் பொழுது என்று இந்த மூன்று நிலைகளிலும் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இவை அனைத்துமே உணவின் தெர்மிக் விளைவு என்று கூறப்படுகிறது. ஆனால், புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, இந்த விளைவு அதிகமாக இருக்கும். எனவே மாவு சத்து மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைவிட புரதம் நிறைந்த உணவை சாப்பிடும் பொழுது அதிகரிக்கும் தெர்மிக் விளைவால், வளர்ச்சிதை மாற்றமும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், புரதச் சத்து அவ்வளவு எளிதாக செரிமானம் ஆகாது, முழுவதுமாக செரிமானம் செய்வதற்கு தாமதம் ஆகும். இதனால்தான் புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவை சாப்பிடும் போது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். மேலும் புரதங்கள் தசை இழப்பையும் தடுக்கும்.
ஜில்லென்று தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்: உடலின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை அதிகரிக்க, மிகப் பெரிய விஷயங்களை எதுவுமே செய்ய தேவையில்லை. குளிர்ச்சியான தண்ணீர் தேவையான அளவு குடித்தாலே உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். ஜில்லென்று இருக்கும் தண்ணீரை குடித்தால் மெட்டபாலிசம் 25% வரை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜில்லென்று தண்ணீர் குடிக்கும் பொழுது உடலில் வெப்பத்தை சமநிலைப்படுத்த உடல் வெப்பத்தை அதிகரிக்கும் செயல்பாட்டில் ஈடுபடும். இதனால் உடலில் சேகரிக்கப்பட்டிருக்கும் கலோரிகள் எரிக்கப்பட்டு இதன் மூலம் எடை குறையும்.
போதுமான அளவு, சரியான நேரத்தில் தூக்கம் : தினசரி நன்றாக தூங்கி எழுந்தாலே சமீப காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் பல விதமான வாழ்க்கைமுறை குறைபாடுகள் சார்ந்த நோய்களைத் தவிர்க்க முடியும். நன்றாக தூங்கி எழும் பொழுது உடல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். எனவே தினசரி போதுமான அளவு மற்றும் போதுமான நேரம் சரியான நேரத்தில் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும்.