உடல் எடையை குறைக்க நீங்கள் எடுத்த பல வகையான முயற்சிகளால் சோர்வுற்று இருக்கிறீர்களா? என்ன செய்தாலும் உடல் எடை குறைய மறுக்கிறதா? தவறில்லை! ஏனெனில் உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அதே சமயம் நீங்கள் நினைக்கும் அளவிற்கு மிகவும் கடினமான காரியமும் அல்ல. உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள், உங்களின் செயல்கள் அனைத்தும் சரியான திசையை நோக்கி செல்லும் பட்சத்தில் 'வெயிட் லாஸ்' சாத்தியம் தான். எல்லாம் சரியாகத்தானே செய்கிறேன் ஆனாலும் உடல் எடை குறைந்த பாடில்லை என்றால் உங்கள் அணுகுமுறையில் ஏதோ தவறு இருப்பதாக அர்த்தம்.
நீங்கள் போதுமான அளவு 'ஹைட்ரேடட்' ஆக உள்ளீர்களா? குடிநீரின் நன்மைகள் மற்றும் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிந்திருந்தாலும் கூட, பெரும்பாலான மக்கள் தங்கள் வெயிட் லாஸ் டயட்களில் தோல்வியடைகிறார்கள். டிஹைட்ரேஷன், சிறுநீரக செயல்பாட்டை தடுப்பது மட்டுமின்றி கல்லீரலையும் பாதிக்கிறது. கல்லீரலின் முக்கிய வேலைகளில் ஒன்று - கொழுப்பை எரிப்பது. எனவே, நீங்கள் எப்போதும் 'ஹைட்ரேடட்' ஆக இருப்பதும், உங்கள் உணவில் போதுமான அளவு நார்ச்சத்துக்களை சேர்க்க வேண்டியதும் அவசியமாகிறது.
அதிகப்படியான உடற்பயிற்சிகளை செய்கிறீர்களா? உங்களின் வழக்கமான வொர்க்அவுட் கொஞ்சம் எல்லை மீறினால், அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம். அதிக வொர்க்அவுட் அதிக பசியை தூண்டும், அப்போது நிறைய சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து நீங்கள் கூடுதல் கலோரிகளை உட்கொள்வீர்கள், அவ்வளவு தான் - உங்களின் வெயிட் லாஸ் காரியம் கெட்டது. இன்னும் சொல்லப்போனால் அதிகப்படியான உடற்பயிற்சிகள் வாட்டர் ரிடென்சனை (water retention) ஊக்குவித்து உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.
எப்போதுமே மன அழுத்தமா? பெரும்பாலான மக்களுக்கு மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான சரியான வழி தெரியவில்லை. சக ஊழியர் அல்லது குடும்ப உறுப்பினருடன் சண்டையிடுவது முதல் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழப்பது வரை, ஒரு தனிநபருக்கு மன அழுத்தம் ஏற்பட ஆயிரமாயிரம் வழிகள் இங்குண்டு. இதனால் பெரும்பாலான மக்கள் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்றே அதிகமான உணவை உட்கொள்கின்றனர். எனவே வெயிட் லாஸின் போது உங்கள் மன அழுத்தத்திற்கு அடிபணியாமல் 'ஃபோகஸ்' ஆக இருக்க முயற்சி செய்யவும்.
நாள் முழுவதும் அமர்ந்தே இருக்கிறீர்களா? நாள் முழுவதும் உட்கார்ந்தே கிடக்கும் லைஃப் ஸ்டைல் உங்களுக்கு இருப்பின், நீங்கள் தினமும் ஒரு மணிநேரம் வொர்க் அவுட் செய்வது எந்த பலனையும் கொடுக்காது. கொழுப்பை எரிப்பதில் லிபேஸ் (lipase) என்கிற என்சைம் முக்கிய பங்கை வகிக்கிறது, மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடலில் குறிப்பிட்ட என்சைமின் சரியான உருவாக்கத்தை மாற்றுகிறது. எனவே, நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் பொழுது, அவ்வப்போது 2 - 3 நிமிடங்கள் எழுந்து நடக்கவும். அது உங்கள் லிபேஸ் உற்பத்தியை மேம்படுத்தும்.
புரோட்டீனின் முக்கிய பொறுப்புகள் : உடலின் தசைகளை உருவாக்குதல், அதை சீர்செய்தல் மற்றும் உடலுக்கான ஆற்றலை வழங்குதல் - போன்ற முக்கிய தேவைகளுக்கு புரோட்டீன் தான் பொறுப்பு. புரோட்டீன் தான் தசையை உருவாக்குகின்றன, கொழுப்பை எரிக்கும் வேலையை துரிதப்படுத்துகின்றன. எனவே தான் உங்கள் எடையைப் பொறுத்து, உங்கள் உணவில் போதுமான அளவு புரோட்டீனைச் சேர்ப்பது மிகவும் முக்கியம்.