எல்லோருமே அழகாக இருக்க விரும்புகிறார்கள் அதேபோல் சரியான உடல் வாகுடன் ஸ்லிம்மாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் எல்லோரும் ஜிம்மிற்கு செல்வதை விரும்புவதில்லை. பலர் ஆர்வத்தில் ஜிம்மில் சேர்ந்து விடுவார்களே தவிர ரெகுலராக போக மாட்டார்கள். அவர்களில் நீங்களும் ஒருவரா.! ஜிம்மிற்கு செல்வதை மிக பெரிய வேலையாக உணர்கிறீர்களா.! அப்படி என்றால் உடல் எடையை குறைக்க என்ன தான் வழி.
ஜிம் வொர்கவுட்களுக்கு ஈடாக கலோரிகளை இழக்க வைக்கும் விளையாட்டை விளையாடுவதே இதற்கு சிறந்த பதிலாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான விளையாட்டை நீங்கள் தேர்வு செய்து விளையாடுவது உங்களுக்கு ஒரு சுமையாக இருக்காது. தினசரி பேட்மிண்டன் விளையாடுவது உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த வழி. மேலும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட இது நல்ல வாய்ப்பாகும்.
ஒரு மணி நேரத்திற்கு 300-500 கலோரிகளை எரிக்க உதவும் பேட்மிண்டன்: 1 மணி நேரம் பேட்மிண்டன் விளையாடுவதன் மூலம் சுமார் 300 கலோரிகளை எரிக்க முடியும். உங்கள் விளையாட்டின் தீவிரத்தை நீங்கள் அதிகரிக்கும்பட்சத்தில் அதற்கேற்ப அதிக கலோரிகளை தானாகவே எரிக்க முடியும். தொழில்முறை பேட்மிண்டன் வீரர்கள் தாங்கள் விளையாடும் 1 மணிநேரத்தில் சுமார் 500 கலோரிகள் வரை எரிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
HIIT (High-intensity interval training) பயிற்சி போன்றது பேட்மிண்டன்: ஜிம்மில் High intensity interval training பயிற்சிகளை செய்ய நீங்கள் தயங்குகிறீர்கள் என்றால், பேட்மிண்டன் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஏனென்றால் பேட்மிண்டன் விளையாடுவது HIIT-க்கு ஈடான பலன்களையும் முடிவுகளையும் அளிக்கிறது. பேட்மிண்டன் ஷார்ப்பான மற்றும் விரைவான அசைவுகள், மற்றும் கூல்டவுன் ரிலீஃப்களை உள்ளடக்கியது. பேட்மிண்டனின் இந்த அம்சம் தான் கொழுப்பை கரைப்பதற்கு பெரிதும் உதவுகிறது.
டோனிங் வொர்கவுட்டாக செயல்படுகிறது: பொதுவாக டோனிங் வொர்கவுட்ஸ் தசைகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து உடலமைப்பை வளர்க்கும் நோக்கம் கொண்டது. பேட்மிண்டனில் அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டும் ஒரு ஃபிகர்-டோனிங் வொர்க்கவுட் போலவே பலன்களை தருகிறது. ஏனென்றால் சில சமயங்களில் ட்ரிக்கி ஷாட் அடிக்க உயரமாக குதிக்க வேண்டியிருக்கும் அல்லது ஸ்மாஷ் அடிக்க ஸ்பீடாக ஓட வேண்டும். பேட்மிண்டன் விளையாடுவது பொதுவாக இடுப்பை சுற்றிய சதையை குறைக்க, உடலின் மையத்தை வலுப்படுத்த, பிட்டம் மற்றும் தொடை எலும்புகளை டோனிங் செய்ய உதவும். தொடர்ந்து பேட்மிண்டன் விளையாடுவது ஸ்டாமினாவை அதிகரிக்க செய்யும்.
அதிக தண்ணீர் குடிப்பீர்கள்: அதி தீவிரமாக நீங்கள் பேட்மிண்டன் விளையாடிய பிறகுஉங்களுக்கு அதிக தாகம் எடுக்கும் இதன் மூலம் நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவு இயல்பை விட அதிகரிக்கும். விளையாட்டின் மூலம் வெளியேறும் வியர்வை மற்றும் அதிக தண்ணீர் குடிப்பது உள்ளிட்டவற்றின் மூலம் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும். அதிக தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மற்றும் பசியை குறைக்க உதவும். போதுமான அளவு குடிக்காததால் உடல் தண்ணீரை சேமித்து வைப்பதால் ஏற்படும் எடை அதிகரிப்பை இப்பழக்கம் தடுக்கிறது.