மக்களில் பெரும்பாலானோர் எடையை கட்டுப்படுத்தும் முயற்சியில் அல்லது குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வயிற்று பகுதியில் குவியும் கொழுப்பை குறைக்க (தொப்பையை) பலம் கடும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர். உடலின் மற்ற பகுதிகளில் உள்ள கொழுப்பை அகற்றுவதை விட தொப்பையை குறைப்பது மிகவும் கடினமான ஒன்று. அவ்வளவு எளிதில் தொப்பை குறையாது. வயிற்று பகுதியில் கொழுப்பு எளிதாக குவிந்து விடும் ஆனால் அகற்றுவது கடினம்.உடல் உறுப்புகளில் வயிறு மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும் மற்றும் இங்கே குவியும் கொழுப்பும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எடை இழப்பு பயிற்சிகளில் தீவிரமாக செயல்பட்டாலும் தொப்பை குறையாமல் போவதற்கான சில முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்...
வளர்சிதை மாற்றம்: வயது ஏற ஏற நம் வளர்சிதை மாற்றம் என்பது குறைகிறது. குறிப்பாக இது தொப்பை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டாலும் சிலர் வெயிட் போடாமல் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அவர்களின் உடலில் இருக்கும் வேகமான வளர்சிதை மாற்றமே இதற்கு காரணம். ஒருவேளை உங்களுக்கு வளர்சிதை மாற்றம் மெதுவாக இருப்பின் தொப்பை அவ்ளளவு எளிதில் குறையாது. தவிர தைராய்டு பிரச்சனைகள், நீரிழிவு நோய் மற்றும் பிற மருத்துவ கோளாறுகளால் மெதுவான வளர்சிதை மாற்றம் இருக்கலாம்.
மோசமான உணவு பழக்கம்: தொப்பையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் போது கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது வயிற்று பகுதியில் குவியும் கொழுப்பிற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். இன்றைய நாளில் சூப்பர்மார்கெட்ஸ் மற்றும் ரெஸ்டாரெண்ட்ஸ்களில் ஆரோக்கியமற்ற உணவுகளே அதிகம் உள்ளன. இவற்றை அதிகமாக சாப்பிடுவது இதய நோய்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் அல்லது நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறைதல், தூக்கமின்மை மற்றும் பக்கவாதம் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மன அழுத்தம்: மன அழுத்தம் மற்றும் மோசமான ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மாற்றங்கள் எடை அதிகரிப்பு அல்லது எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். உடலில் உள்ள அட்ரீனல் சுரப்பிகள் மன அழுத்தம் இருக்கும் நேரங்களில் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை வெளியிடுகின்றன. கார்டிசோல் உடல் கொழுப்பைச் சேமித்து வைக்கிறது, குறிப்பாக வயிற்றுப் பகுதியில்.
அதிகமாக மது அருந்துவது: அதிகமாக ஆல்கஹால் குடிப்பது எடை அதிகரிக்க வழிவகுக்கும், ஏனெனில் இதில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. அதிக மது அருந்துவது தொப்பையில் உள்ள கொழுப்பை கரைய விடாமல் தடுக்கிறது. மேலும் அளவுக்கு அதிகமாக மது குடிப்பது கல்லீரலை சேதப்படுத்தும் மற்றும் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு ஏற்படுத்தும்.
உடற்பயிற்சியை தவிர்ப்பது: உடல் எடையை மற்றும் தொப்பையை குறைக்க டயட் மட்டுமே போதாது. போதுமான உடற்பயிற்சி செய்தால் தான் எதிர்பார்க்கும் பலன்களை பெற முடியும். உடற்பயிற்சி செய்யும் போது வலி மற்றும் பதற்றத்தை போக்க உதவும் ஹார்மோன்களான எண்டோர்பின்கள் உருவாகின்றன. உடற்பயிற்சிகள் கலோரிகளை எரித்து எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.