கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே பலருக்கும் உருவான மிக பெரிய பிரச்சனை உடல் பருமன் தான். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்து இருப்பது, தவறான உணவு பழக்கம், தூக்கமின்மை போன்ற முக்கிய காரணிகளால் உடல் எடை அதிகரித்து விடுகிறது. உடல் எடை கூடினால் சர்க்கரை நோய், இதய பாதிப்பு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வரும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்றில் உடல் பருமனால் சிறுநீரக கோளாறுகளும் ஏற்படும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
உடலில் உள்ள மிக முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. இது சரியாக வேலை செய்யவில்லை என்றால், நிச்சயம் உயிருக்கே ஆபத்தாகி விடும். சிறுநீரக பிரச்சனைகள் பொதுவாக அதன் அறிகுறிகளை ஆரம்ப நிலையில் வெளிக்காட்டுவதில்லை. இருப்பினும், முழுமையான சிறுநீர் பரிசோதனை மூலம் இதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம். வழக்கமான மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக கிரியேட்டினின் அல்லது யூரியா அளவு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவை சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது இரத்தத்தில் கசியும் இரசாயனங்கள் ஆகும்.
மேலும் இந்த பரிசோதனைகள் மூலம் சிறுநீரக பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சையளிப்பது எளிதாக இருக்கும். ஒருவருக்கு சர்க்கரை நோய், இதய நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் இருந்தால் சீரான இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிறுநீரக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் 50 மில்லியனுக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இவர்களுக்கு நீண்டகால சிறுநீரக நோய்களை எதிர்கொள்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
முக்கியமாக மோசமான வாழ்க்கை முறை காரணமாக மக்களுக்கு இது போன்ற பாதிப்புகள் அதிகரிக்கிறது. எனவே, சிறுநீரகம் தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் நீரிழிவு நோயைத் தடுக்க, சுறுசுறுப்பான மற்றும் உற்சாகமான வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவத்தை கொடுப்பது அவசியம். மனித உடலில் சிறுநீரகங்கள் மிகவும் அற்புதமான உறுப்புகளாக உள்ளன. ஒருவர் ஆரோக்கியமாக வாழ சிறுநீரகங்கள் உதவுகின்றன. "இந்த பீன் வடிவ உறுப்புகள், ஒரு நபரை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நிமிடத்திற்கு 120 மில்லி இரத்தத்தை (ஒரு நாளைக்கு 170 லிட்டர்) வடிகட்டுகின்றன.
கூடுதலாக, சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுகளை அகற்ற உதவுகின்றன, மேலும் உடலில் உள்ள ரசாயனங்கள் மற்றும் தாதுக்களின் சமநிலையை இவை பராமரிக்கின்றன. குளோமருலி என்பது சிறுநீரகங்களில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் ஆகும். இந்த பகுதியில் தான் இரத்தம் சுத்தம் செய்யப்படுகிறது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு கால போக்கில் இந்த பாதிப்புகள் பெரிதாக கூடும் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் இதனால் குறையத் தொடங்குகிறது.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பார்த்து கொள்ள அவ்வப்போது பரிசோதனைகளை மேற்கொள்வது தான் சிறந்த வழியாகும். சோர்வு, உயர் இரத்த அழுத்தம், கால் வீக்கம் போன்ற அறிகுறிகளைக் கொண்ட எந்தவொரு நபரும் அவரது சிறுநீரகங்களின் நிலை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; மேலும் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள இரத்த சர்க்கரை, கிரியேட்டினின் மற்றும் ஈஜிஎஃப்ஆர் ஆகியவற்றின் அளவுகளை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வது நல்லது.