கிறிஸ்துமஸ், அதைத் தொடர்ந்து புத்தாண்டு என்று அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் அணிவகுத்த நிலையில், உங்கள் உணவுக் கட்டுப்பாடு எல்லை மீறி சென்றிருக்கும். அடுத்ததாக பொங்கல் விடுமுறை நாட்களிலும் கூட உணவு வேட்டை எல்லை மீறி செல்வதை நம்மால் தடுக்க இயலாது. ஆக, தவிர்க்க இயலாத சூழலில் இந்த பண்டிகை தினங்களை கொண்டாட்டமாக கழிக்கும் அதே வேளையில், உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவது எப்படி என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
எளிமையான இலக்குகளை நிர்ணயிக்கவும் : திடீரென்று தடாலடியாக உணவுக் கட்டுப்பாடு விதித்து விட முடியாது. அதை கடைப்பிடிப்பதும் சிரமம். ஆகவே உங்களால் இப்போதைக்கு எளிமையாக என்ன பழக்கத்தை விட முடியுமோ, அதை இலக்காக நிர்ணயம் செய்து கொள்ளவும். உதாரணத்திற்கு காய்கறி, பழங்களின் அளவுகளை அதிகரிக்கும் அதே வேளையில் இனிப்பு மிகுந்த செயற்கை குளிர்பானங்களை குறைத்துக் கொள்ளலாம்.
முன்கூட்டியே டயட் திட்டம் மேற்கொள்வது : அடுத்த வேளைக்கு என்ன உணவு சாப்பிட வேண்டும், என்ன ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம் என்று முன்கூட்டியே திட்டமிட வேண்டும். முன்கூட்டியே யோசிப்பதால் ஆரோக்கியமற்ற உணவு வகைகளை நம் மனம் தாமாகவே தவிர்த்து விடும். எதையும் திட்டமிடாமல் கண்ணில் தென்படும் அனைத்தையும் சாப்பிடத் தொடங்கினால் உடல் பருமனை தவிர்க்க இயலாமல் போகும்.
ஆரோக்கியமான உணவுகளை இருப்பு வைப்பது : நீங்கள் வெளியிடங்களுக்கு செல்கிறீர்கள், தொலைதூரம் பயணம் செல்கிறீர்கள் என்றால் ஆரோக்கியமான உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை முடிந்தவரை உடன் எடுத்துச் செல்வது நல்லது. ஏனென்றால் போகும் இடங்களில் கிடைக்கின்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கலாம் மற்றும் சில தொந்தரவுகள் ஏற்படலாம்.
சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் : உணவு கட்டுப்பாடு பழக்கங்களை பின்பற்றுகின்ற அதேவேளையில் நம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது அவசியமாகும். உடற்பயிற்சி செய்தால் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் மற்றும் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். வாரம் ஒன்றுக்கு 150 நிமிடங்கள் வரையில் பயிற்சி செய்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் கலோரிகள் எரிக்கப்படும்.
மனதில் கட்டுப்பாடு வேண்டும் : எப்போதும் நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம், அதன் மூலமாக நமக்கு கிடைக்கின்ற சாதக, பாதகங்கள் என்ன என்பது குறித்து மனதில் கவனம் இருக்க வேண்டும். குறிப்பாக, டிவி பார்த்துக் கொண்டு அல்லது மொபைல் ஃபோன் பார்த்துக் கொண்டு ஸ்நாக்ஸ் கொரிக்கும் பழக்கம் இருந்தால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற எச்சரிக்கை உணர்வே மனதுக்கு தோன்றாமல் போய்விடும்.