சித்திரை, வைகாசி மாதங்கள் பொதுவாகவே வெயில் சுட்டெரிக்கும் காலங்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன் வெயில் சார்ந்த நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது அவசியமாகும். வெயில் என்னதான் ஒருபக்கம் வாட்டி வதைத்தாலும் நம் அன்றாட பணிகளை நாம் ஒதுக்கி வைக்க முடியாது. வங்கிக்கு செல்வது, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது என நாம் செய்ய வேண்டிய பணிகளை செய்துதான் ஆக வேண்டும். அதே சமயம் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள சில எளிய டிப்ஸ்களை கடைப்பிடித்தால் போதுமானது.
ஆடைகளின் தேர்வில் கவனம் : வெயில் காலத்தில் நாம் என்ன மாதிரியான உடைகளை தேர்வு செய்கிறோம் என்பது குறித்து கவனம் செலுத்துவது அவசியமாகும். நல்ல அடர்த்தியான கலர் கொண்ட உடைகளை அணிந்து கொண்டு வெயிலில் அலைந்து கொண்டிருந்தீர்கள் என்றால், அது வெப்பத்தை அதிகம் ஈர்க்கும். ஆகவே வெயில் காலத்தில் லைட் கலர் ஆடைகளை அணிவது நல்லது. என்ன மெட்டீரியலில் தயாரான உடைகளை நீங்கள் அணிகிறீர்கள் என்பதும் முக்கியமானதாகும். வெளிப்புற ஆடைகள் முதல் உள்ளாடைகள் வரையில் காட்டன் துணிகளை வெயில் காலத்தில் பயன்படுத்தினால், வெப்பத்தினால் ஏற்படும் தாக்கங்களை குறைக்க முடியும்.
முடி பராமரிப்பு அவசியம் : ஆண்களாக இருப்பின் வெயில் காலத்தில் முடியை ஒட்ட வெட்டிக் கொள்வது நல்லது. முடி அதிகமாக இருந்தால் வியர்வை கோர்த்து சளி புடிக்க வாய்ப்பு உண்டு. பெண்களாக இருந்தால், வெயில் காலத்தில் லூஸ் ஹேர் ஸ்டைல் எப்போதும் ஒத்து வராது. ஆகவே தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளாஸ்டிக் ஹேர் பேண்ட் ஒன்றை கையோடு வைத்திருக்கவும்.
குளிர்பானங்களை அருந்தலாம் : உச்சி வெயில் அடிக்கும் சமயங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம். அதிலும், ஆர்டிஃபிஷியல் ஸ்வீட்னர்கள் கலந்த பானங்களைக் காட்டிலும் இயற்கையான பானங்களை எடுத்துக் கொள்வது நல்லது. இவை உடலுக்கு நன்மை அளிப்பதோடு, எந்தத் தீங்கும் இல்லாதவை ஆகும். குறிப்பாக இளநீர், நுங்கு, தர்பூசணி, முலாம்பழம் போன்ற இயற்கையான பானங்கள் மற்றும் ஜூஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இவை சாலையோரக் கடைகளில் மிக எளிதில் கிடைக்கக் கூடியவை ஆகும்.
அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும் : வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து அவ்வபோது குறையத் தொடங்கும். இதனால், அவ்வபோது தண்ணீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். வாட்டர் பாட்டிலை கையோடு வைத்துக் கொண்டு, அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் அருந்திக் கொண்டே இருக்கலாம். அதே சமயம், வெயில் நேரத்தில் காஃபி, டீ போன்ற பானங்களை தவிர்த்து விடுவது நல்லது.
ஏசி பயன்படுத்தலாம் : கோடை காலத்தில் நமக்கு உற்ற நண்பனாக இருப்பது ஏசி-யாகும். வெளியிடன்களில் சுற்றித் திரிந்து, களைத்துப் போய் வீட்டிற்குல் நுழையும் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது ஏசி ஆகும். தேவைக்கு ஏற்றபடி கூலிங் அதிகரித்துக் கொள்ளும் வசதி இருப்பதால், வெளியே வெயில் எவ்வளவு இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் குளுமையை அனுபவிக்க முடியும்.
சரும பாதுகாப்பு அவசியம் : வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் சமயங்களில் முடிந்தவரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்லும்போது நிழலில் செல்ல வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாத சூழலில் குடைபிடித்து நடந்து செல்லலாம். வாகனங்களில் செல்லும்போது சரும பாதுகாப்பு கருதி சன்ஸ்கிரீன் புராடக்ட்களை பயன்படுத்தலாம்.