பெரியவர்கள் முதல் வளர் இளம் தலைமுறையினர் வரை பலரும் புகை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். குறிப்பாக, பருவ வயதில் முதன் முதலாக புகை பிடிக்க தொடங்கிய பலரை கேட்டு பாருங்கள். “சும்மா எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு தோனுச்சு’’ என்ற ரீதியில் புகைப்பிடிக்க தொடங்கியதாக கூறுவார்கள். ஆனால், நாளடைவில், அதுவே கைவிட முடியாத பழக்கமாக மாறி போயிருக்கும்.
முதலில் ஆலோசனை செய்ய வேண்டும் :
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு எந்த அளவுக்கு கேடானது என்பதை, ஒரு நண்பரைப் போல உங்கள் பிள்ளைகளுக்கு புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும். மாறாக, எடுத்த எடுப்பிலேயே மிரட்டுவது அல்லது அடிப்பது போன்ற நடவடிக்கைகளை கையாளக் கூடாது. புகை பிடிப்பது எந்த அளவுக்கு கேடு தரும் என்ற கேள்வியை முன்வைக்க வேண்டும். எது சரி, எது தவறு என்பதை முடிவு செய்யும் பக்குவத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
வேண்டாம் என சொல்வதன் முக்கியத்துவம் :
பருவ வயதில் தனிப்பட்ட முறையில் ஏற்படும் அழுத்தம் காரணமாகத் தான் பல குழந்தைகள் எதையேனும் புதுமையாக செய்ய வேண்டும் என நினைக்கின்றனர் அல்லது இதை முடிந்தால் செய்து பார் என்ற சவாலை சக நண்பர்களிடம் இருந்து எதிர்கொள்கின்றனர். அத்தகைய சூழலில் மன உறுதியுடன் வேண்டாம் எனக் கூறி விட வேண்டும் என பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள்.
உடல் நலப் பாதிப்புகளை புரிய வைக்க வேண்டும் :
இ-சிகரெட் பாதுகாப்பானது என பல இளைஞர்கள் நினைக்கின்றனர். ஆனால், எந்த வகையில் புகைப்பிடித்தாலும் அது உடல் நலத்திற்கு கேடானது தான் என்பதை யதார்த்த வாழ்வில் உள்ள உதாரணங்களோடு எடுத்துக் கூற வேண்டும். புகை பிடிக்கும் நபர்கள் உள்ள பகுதியையே தவிர்க்க வேண்டும் என அறிவுரை சொல்வது அவசியமானது.
எதனால் ஈர்க்கப்படுகிறது என்பதை புரிய வைக்க வேண்டும் :
புகைப்பிடிப்பது ஏதோ புரட்சிக்குரிய சிந்தனை என சில இளைஞர்கள் நினைக்கின்றனர். ஆனால், புகைப்பிடிப்பதை ஸ்டைலான, கூலான, வலிமையான விஷயமாக விளம்பரங்கள் எந்த அளவுக்கு தவறாக கட்டமைக்கின்றன என்பதை பிள்ளைகளிடம் எடுத்து கூற வேண்டும். டிவி மற்றும் விளம்பரங்களில் வரும் காட்சிகளில், “புகை உடல் நலத்திற்கு கேடு தரும்’’ என்ற தலைப்பு இருப்பதை சுட்டிக் காட்டுங்கள்.