கொஞ்சம் கொஞ்சமாக வெயில் காலம் தொடங்கி வருகிறது. இனி எங்கு பார்த்தாலும் குளிர்ச்சியை தேடி மக்கள் கூட்டம் அலைமோதும். அதற்கேற்றாற் போல குளிர்ச்சியை தர கூடிய உணவு பொருட்களை நாம் அதிகம் எடுத்துக்கொள்ள தொடங்குவோம். வெயில் காலம் என்றாலே நம் எல்லோரின் நினைவுக்கு வருவது தர்பூசணி பழம் தான். தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் பலவித வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. தர்பூசணி பழத்தில் 92% தண்ணீர் உள்ளது. எனவே இதை வெயில் காலத்தில் சாப்பிடுவதால் பல வித நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கும். இந்த பதிவில், தர்பூசணி பழத்தை கோடை காலத்தில் ஏன் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
நோய் எதிர்ப்பு சக்தி: ஒரு தர்பூசணிப் பழத்தில் தினசரி தேவைப்படும் அளாவில் சுமார் 16% வைட்டமின் சி முழுமையாக உள்ளது. வைட்டமின் சி உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை எளிதாக்குகிறது. மேலும் இவை பல்வேறு தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் அவசியமானது. வெயில் காலத்தில் சளி பிடிக்க வாய்ப்புள்ளதால், தர்பூசணி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும்.
உடல் நலத்தை மேம்படுத்தும்: உடற்பயிற்சிக்கு முன், தர்பூசணி பழத்தை சாப்பிடுவது அதிக ஆரோக்கியத்தை தரும். இதில் சிட்ரூலின் என்கிற முக்கிய மூலப்பொருள் உள்ளது. இது உடல் செயல்பாடுகளின் போது அத்தியாவசிய அமினோ அமிலங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும், உடற்பயிற்சிக்குப் பிறகு தர்பூசணி பழத்தை உட்கொண்டால், தசைகளை வலுவாக்க வழிசெய்யும். மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவுகிறது.
இதய ஆரோக்கிய பாதுகாப்பு: தர்பூசணிகளில் லைகோபீன் என்கிற முக்கிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக உள்ளது. லைகோபீன் என்பவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் தர்பூசணியின் பங்கு அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கண் ஆரோக்கியம்: பீட்டா கரோட்டின், லுடீன், வைட்டமின் சி மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் தர்பூசணி பழத்தில் நிறைந்துள்ளது. எனவே இதை உட்கொள்வதால் உங்கள் கண்களின் ஆரோக்கியம் மேம்படும். கண்ணின் மாகுலர் சிதைவைத் தடுப்பதிலும், கிளாகோமா போன்ற கண் சார்ந்த நோய்களைத் தடுப்பதிலும், பார்வை நரம்புகள் மற்றும் கண்கள் வறண்டு போவதில் இருந்தும் இந்த தர்பூசணி பழக்கம் காக்கும்.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும்: தர்பூசணியில் போதுமான அளவு கால்சியம் மற்றும் பொட்டாசியம் தாதுக்கள் உள்ளன, இது உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும், இது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. மற்றும் சிறுநீரக கண் உருவாவதையும் இது தடுக்கிறது. எனவே தர்பூசணியானது உடலில் உள்ள நச்சுகளை நீக்க பெரிதும் உதவுகிறது.