உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்தான உணவுகள் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் முக்கியம். உணவு இல்லாமல் கூட சில நாட்கள் இருந்து விடலாம் ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருப்பது மிகவும் கடினம். உடலுக்கு தேவையான அளவை விட தண்ணீர் குறைவாகக் குடித்தாலே அது பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தி பாதிப்புகளை உண்டாக்கும்.
உடலில் நீர்ச்சத்து குறைபாடு என்பது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு நிலை. தினமும் 8 – 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் முதல் ஊட்டச்சத்து நிபுணர்கள் வரை கூறுகிறார்கள். தண்ணீர் தேவையான அளவு குடிக்காமல் இருப்பது எந்த அளவுக்கு ஆபத்தோ அதே அளவுக்கு ஆபத்தானது அதிகமான தண்ணீர் குடிப்பதும். தண்ணீர் அதிகம் குடிப்பதால் உண்டாகும் விளைவுகள் என்ன என்று பார்க்கலாம்.
எலக்ட்ரோலைட் அளவு குறையும் : நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்கும் போது உடலுக்குள் இருக்கும் எலெக்ட்ரோலைட் அளவுகள் தடாலடியாக குறையும். நீர்ச்சத்து இழப்புக்கு தீர்வாக எலக்ட்ரோலைட் பானங்களை தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். எப்படி உடலில் நீர் குறைவாக இருக்கும் பொழுது எலக்ட்ரோலைட் குறைகிறதோ அதேபோல நீர் அதிகமாக இருக்கும் பொழுதும் எலெக்ட்ரோலைட் அளவுகள் குறைந்துவிடும். இதனால் தசை வலி மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் : அதிகமாக தண்ணீர் குடிக்கும் பொழுது நீங்கள் குறைந்தது 15 – 20 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியது அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி இது உங்கள் கிட்னிக்கு அதிகமான அழுத்தத்தை உண்டாக்கும்.
நீங்கள் சோர்வாக உணர்வீர்கள் : தண்ணீர் குடித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுவது உண்மைதான். ஆனால் உங்களுக்கு தேவையான அளவை விட நிறைய தண்ணீர் குடிக்கும் பொழுது அதுவே உங்களை சோர்வாக்கிவிடும். நிறைய தண்ணீர் குடிக்கும் போது உங்கள் கிட்னி வழக்கத்தை விட அதிகமாக வேலைசெய்யும். ஏதேனும் ஒரு உறுப்பு அதிகமாக இயங்கும் பொழுது உடலில் அது பல்வேறு விளைவுகளாக வெளிப்படும். கிட்னிக்கு ஏற்படும் கூடுதல் அழுத்தம் உடலில் ஸ்ட்ரெஸ்ஃபுல்லான ரியாக்ஷனை உருவாக்கி உங்களை பாதிக்கும்.
கேன்சர் ஏற்படும் அபயம் அதிகரிக்கும் : தண்ணீருக்கும் கேன்சருக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் தற்போது க்ளோரின் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் தான் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. க்ளோரின் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அதிகமாக குடிப்பதன் மூலம் சிறுநீர்ப்பை மற்றும் டெஸ்டிகுலர் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.