கல்லீரல் செயலிழப்பிற்கு மது அருந்தும் பழக்கம் தான் பிரதான காரணமாக இருக்கிறது. நீங்கள் மது அருந்தும் போது, அது நச்சுத்தன்மை கொண்டது என்பதால் அதை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு கல்லீரலில் இருந்து பல்வேறு என்ஜைம்கள் உற்பத்தி ஆகின்றன. எனினும், கல்லீரலால் எந்த அளவுக்கு வெளியேற்ற முடியுமோ, அதைவிட கூடுதலாக நீங்கள் மது அருந்தும்போது, உங்கள் கல்லீரலின் செயல்பாட்டை அது பாதிக்கிறது.
வாய் வறட்சி : வாயில் எச்சில் சுரப்பு நின்று போவது அல்லது குறைந்து போவது போன்ற காரணத்தால் வாய் வறட்சி ஏற்படும். மது பழக்கத்தின் எதிரொலியாக கல்லீரல் செயலிழந்தவர்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும். நீங்கள் எவ்வளவு தான் தண்ணீர் அருந்தினாலும் அல்லது குளிர்பானங்களை அருந்தினாலும் இந்த வாய் வறட்சி போகவே போகாது.
குமட்டல் : மது பழக்கத்தால் கல்லீரல் அழற்சி ஏற்படும் போது, அதன் விளைவாக அடிக்கடி குமட்டல் உணர்வு ஏற்படும். சில சமயங்களில் அதிக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சினைகள் வரும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் திறனை கல்லீரல் இழப்பதன் காரணமாக, அந்தக் கழிவுப் பொருட்கள் உடலில் தங்கியிருந்து குமட்டலை ஏற்படுத்தும். இதனுடன் தலைச்சுற்றல், உடல் சோர்வு, லேசான காய்ச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
உடல் எடை குறைவு, பசியின்மை : மிக அதிகளவில் மது அருந்துபவர்களுக்கு நாளடைவில் பசி குறைந்துவிடும். இதனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் மினரல்கள் ஆகியவை கிடைக்காது. இது மட்டுமல்லாமல் திடீர் உடல் எடை இழப்பு பிரச்சினை ஏற்படும். நீண்ட காலமாக மது அருந்துவதால் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை இழக்கும். இதனால், எடை இழப்பு ஏற்படும்.
வலது மேல்புறம் வயிற்றில் வலி : மது பழக்கத்தால் கல்லீரல் பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு வலது மேல் வயிற்றில் அசௌகரியம் மற்றும் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதிகமாக மது அருந்தும்போது கல்லீரல் வீக்கம் அடையத் தொடங்குகிறது. இதன் காரணமாக வலி ஏற்படும். இது சிரோசிஸ் என்னும் கல்லீரல் முற்றிலும் செயலிழந்ததை உணர்த்துகிறது. இது மட்டுமல்லாமல், இந்தப் பிரச்சினை இருப்பவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
இதர அறிகுறிகள் : சிரோசிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரகப் பிரச்சினை, வயிற்றில் ரத்தக்கசிவு, மனக்குழப்பம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மது பழக்கத்தால் பாதிக்கப்பட்ட 30 சதவீதத்தினருக்கு ஹெபடிடீஸ் சி என்னும் வைரஸ் பாதிக்கிறது. எஞ்சியுள்ளோரை ஹெபடிடீஸ் பி என்னும் வைரஸ் பாதிக்கிறது. கால்கள் மற்றும் பாதங்கள் வீக்கம், சிறுநீரின் நிறம் அடர்த்தியாக இருப்பது, வெளிரிய நிறத்தில் மலம் வெளியேறுவது போன்றவையும் கல்லீரல் செயலிழப்பின் அறிகுறிகள் ஆகும்.