2019ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா தொற்று என்பது 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு உலகெங்கிலும் உள்ள மக்களை ஆட்டிப்படைத்து விட்டது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் முடங்கிக் கிடந்த நிகழ்வுகளை நாம் பார்த்தோம். இந்நிலையில், 2022ஆம் ஆண்டு சற்று நிம்மதியை கொடுத்தாலும், ஆண்டின் இறுதி நேரம் நெருங்கிக் கொண்டிருக்கையில் பெரும் அபாயம் குறித்த எச்சரிக்கை வந்துள்ளது.
இந்நிலையில், பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி, வாத்து போன்ற இதர பறவை இனங்களுக்கும் இந்த நோய் பரவக் கூடும் என்று பெரு நாட்டின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகெங்கிலும் இதுவரையில் இந்த நோய் காரணமாக 13 ஆயிரம் பறவைகள் இறந்துள்ளன என்று பிபிசி ஊடக நிறுவனத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் மனிதர்களை பாதிக்குமா? ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா என்பது பறவைக் காய்ச்சல் நோயாகும். பொதுவாக இது காடுகளில் உள்ள விலங்குகள் மற்றும் பறவை இனங்களை பாதிக்கும். இந்த வைரஸ் பொதுவாக மனிதர்களை பாதிப்பதில்லை. அதே சமயம் ஹெச்7என்9 மற்றும் ஹெச்5என்1 ஆகிய வைரஸ்கள் மனிதர்களை பாதிக்கக் கூடியது ஆகும். சிலருக்கு மிகுந்த உடல்நல பாதிப்புகள் உண்டாகலாம். மேலும் சிலருக்கு உயிரிழப்புகள் ஏற்படக் கூடும்.
இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவுவது எப்படி? பறவைக் காய்ச்சல் பாதிப்பு கொண்ட பறவைகளின் சளி, எச்சில் மற்றும் எச்சம் போன்றவற்றில் வைரஸ் வெளியேறக் கூடும். அதே வைரஸ் மனிதர்களுக்கு கண், மூக்கு, வாய் வழியாக ஊடுருவக் கூடும். பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகம் உள்ள நபர்களுக்கு மூக்கு அல்லது தொண்டை பகுதியில் நீர்த்துளி சேகரித்து சோதனை மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்ட முதல் சில நாட்களில் பரிசோதனை செய்யும் பட்சத்தில் முடிவுகள் மிக துல்லியமாக இருக்கும்.