உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் எத்தனை விதமான முயற்சிகளை செய்திருந்தாலும், அவற்றில் பல திட்டங்கள் தோல்வியில் முடிந்திருக்கும். குறிப்பாக, டயட் திட்டத்தை கடைப்பிடிக்கும்போது கட்டுக்கடங்காத பசி, அடுத்தடுத்த பண்டிகைகள், திருமணம், காதுகுத்து போன்ற விசேஷ சாப்பாடு போன்றவை காரணமாக நம் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கும்.
ஆனால், நமது திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் இந்த குளிர் காலம் மிக உதவிகரமாக இருக்கும். அதுவும் மார்கழி மாதத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் பெரிய அளவுக்கு இருக்காது. அத்துடன் கடந்த கார்த்திகை மாதத்தைக் காட்டிலும் இப்போது குளிர் உச்சபட்ச நிலையில் இருக்கும் என்பதால் சூடான பானங்களை அருந்துவதற்கு மனம் விரும்பும். அத்தகைய பானங்களின் மூலமாகவே நம் உடல் எடையை குறைக்க முடியும்.
டார்க் சாக்கலேட் பானம் : நாவுக்கு இது நிச்சயமாக சுவையளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம், தொப்பையை குறைக்கவும் உதவும். ஒரு கப் அளவு பால் அல்லது பாதாம்பால் அல்லது சோயா பால் எடுத்து கொதிக்க வைக்கவும். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு டார்க் சாக்கலேட் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு கொக்கோ பவுடர் சேர்த்து கொதிக்க வைக்கவும். டார்க் சாக்கலேட்டில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் பிளேவனால்ஸ் போன்ற சத்து காரணமாக நமது பசி உணர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. இதனை இரவு நேரத்தில் அருந்தினால் நல்ல தூக்கம் வரும்.
இஞ்சி டீ : நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க இஞ்சி உதவிகரமாக இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். சிறிதளவு தண்ணீரில் இஞ்சியை கொதிக்க வைத்து அதனுடன் துளசி இலைகளை சேர்த்து 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி, அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அருந்தவும். எலுமிச்சை மற்றும் இஞ்சியில் உள்ள சிட்ரிக் சத்து கொழுப்பை கரைக்கும். துளசி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
புதினா மற்றும் லெமன் டீ : நாம் அதிகம் எடுத்துக் கொள்ளும் டீ வகை இது. சாதாரணமாக தண்ணீரில் நான்கு, ஐந்து புதினா இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு கொதிக்க வைத்து, தேனுடன் கலந்து பருகலாம். இது செரிமான சக்தியை மேம்படுத்தும் மற்றும் உடலின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இதில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவை மெடபாலிச நடவடிக்கைகளை ஊக்குவித்து, அதன் எதிரொலியாக கொழுப்பை கரைக்கும்.
ஏலக்காய், லவங்க பட்டை டீ : ஒரு கப் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு துண்டு லவங்க பட்டை, 2 ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி அருந்தினால் நிச்சயமாக உடல் எடை குறையும். இது மட்டுமல்லாமல் இன்சுலின் சுரப்பை தூண்டி ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும்.