புகைப்பிடிக்கும் பழக்கம் தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பல தீமைகளை கொண்டு வந்து சேர்க்கிறது. ஒருமுறை நீங்கள் புகைப்பிடிப்பவருக்கு அருகாமையில் நின்று, அந்த புகையை சுவாசித்தாலும் ஆயிரக்கணக்கான நச்சுக்கள் உடலுக்குள் புகுந்து நமது செல்களை பாதிக்கும். நீண்ட காலமாக புகைப்பிடிப்பவர்களுக்கு புற்றுநோய், மாரடைப்பு, சுவாசப் பிரச்சினைகள் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். உலகெங்கிலும் புகையிலை பயன்பாட்டினால் ஆண்டுதோறும் 8 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று ஐ.நா.வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கான உத்திகள் : புகைப்பிடிப்பவதை நிறுத்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் பல்வேறு விதமான ஆலோசனைகளை தெரிவிக்கின்றனர். முதலாவது தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக புகைப்பிடிப்பதற்கான எண்ண ஓட்டத்தை தடுக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த வகையில், கார்டியோ நலனையும் சேர்த்து பலன் தருகின்ற ஓட்டம், நீச்சல் போன்ற பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். தினசரி உடற்பயிற்சியை தாண்டி 7,000 முதல் 8,000 ஸ்டெப் எண்ணிக்கையில் நடைபயிற்சி செய்யலாம். உங்கள் இதய நலனை மேம்படுத்த இது உதவும்.
வாழ்வியல் மாற்றங்கள் : எந்த இடத்திற்கு செல்லும்போது அல்லது எங்கு இருக்கும்போது உங்களுக்கு சிகரெட் பிடிப்பதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் இருக்கிறதோ, அங்கு அதிக நேரம் செலவிடுவதை பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் கோலா, டீ, காஃபி, மது போன்ற பானங்களை அருந்தும் போது சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆகவே அதற்குப் பதிலாக அதிகமாக தண்ணீர் மற்றும் பழ ஜூஸ்களை அருந்த வேண்டும். இது சிகரெட் குறித்த எண்ணத்தை கட்டுப்படுத்துகிறது.
5 நிமிட கட்டுப்பாடு : ஒரு சமயத்தில் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றும்போது 5 நிமிடங்களுக்கு மேலாக அந்த வேட்கை உங்கள் மனதில் நீடிக்காது. ஆகவே, அந்த 5 நிமிடங்களுக்கு தியானம் செய்வது, புஷ்ஷப் செய்வது போன்ற மாற்று சிந்தனைகளில் உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள். எந்த ஒரு காரியத்திலும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிட முடியாது. ஆகவே, ஒருமுறைக்கு பலமுறை விடா முயற்சி செய்து இந்தப் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.