வீட்டிலிருந்தே ஆன்லைன் கிளாஸ் மூலம் படித்து வந்த குழந்தைகள் தற்போது பள்ளிகளுக்கு சென்று நேரடி வகுப்புகளுக்கு திரும்பி இருந்தாலும், வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலை பார்க்க துவங்கிய பலரும் இன்னும் அதே முறையை தொடர்ந்து வருகின்றனர். அலுவலகத்தில் வேலை செய்தால் கூட தொடர்ந்து இவ்வளவு நேரம் சிஸ்டம் முன் உட்கார மாட்டோம். ஆனால் வொர்க் ஃப்ரம் ஹோமில் அலுவலகத்தை விட அதிக நேரம் சிஸ்டம் ஸ்கிரீன் முன் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் கண்களின் ஆரோக்கியம் கெடுவதாக பலரும் புலம்புவதை கேட்க முடிகிறது.
டிஜிட்டல் கருவிகளில் இருந்து வெளிப்படும் குறுகிய உயர் ஆற்றல் அலைகள்(short high energy waves) கண்களில் ஊடுருவி இறுதியில் விழித்திரை செல் சேதத்திற்கு பங்களிக்க கூடும். மேலும் கண்கள் உலர்ந்து போவது முதல் கண் அசௌகரியம் மற்றும் சோர்வு, மங்கலான பார்வை மற்றும் தலைவலி உள்ளிட்ட பல கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணமாகலாம். இந்த நிலை டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயின் (Digital eye strain) என்று குறிப்பிடப்படுகிறது. இங்கே டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயினை குறைக்கவும், கண்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் சில எளிய ட்ரிக்ஸ்களை இப்போது பார்க்கலாம்.
20-20-20 விதியை பின்பற்றுங்கள்... கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த 20-20-20 விதியை பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மிகவும் எளிமையானது, இந்த விதியை பின்பற்ற நீங்கள் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை பார்க்கும் நேரங்களில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிய பிரேக் எடுத்து கொள்ள உதவுகிறது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 வினாடிகளுக்கு 20 அடி தொலைவில் உள்ள பொருள் ஒன்றை பார்க்க வேண்டும்.
பாமிங்: சிஸ்டமை விட்டு நகர்ந்தோ அல்லது அமைதியான இடத்திலோ உட்கார்ந்து கொள்ளுங்கள். பின் உங்கள் 2 உள்ளங்கைகளையும் 15-20 வினாடிகள் சூடாக உணரத் தொடங்கும் வரை நன்றாக தேய்க்கவும். விரல் நுனியை நெற்றியில் வைத்து, சூடாக இருக்கும் உள்ளங்கைகளை 2 கண்களுக்கு மேல் வைக்கவும். கண்களை மூடி, ஆழ்ந்த மூச்சை எடுத்து, வெப்பத்தை உணருங்கள். இந்த செயல்முறையை 6-7 முறை செய்து பாருங்கள்.
ஃபோகஸ் ஷிஃப்ட்டிங்: உங்களுக்கு வசதியான நிலையில் அமர்ந்து சாதாரணமாக சுவாசிக்கவும். உங்கள் வலது அல்லது இடது கையை முன்னோக்கி தம்ப்ஸ்அப் செய்வது போல நீட்டி கட்டைவிரலை உங்கள் கண்களுக்கு நேராக வைத்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் பார்வையை அந்த கட்டை விரலை நோக்கி தெளிவாக கவனம் செலுத்துங்கள். கட்டை விரலில் கவனம் செலுத்தியபடியே அந்த விரலை மூக்கை நோக்கி நகர்த்தவும். பின் சில வினாடிகள் இதே பொஷிஷனில் அந்த விரலை பார்த்த பின், மேம்படும் பழையபடி கட்டை விரலை முன்னோக்கி நகர்த்துங்கள். இதே போல 10 முறை வரை செய்யவும்.
கண் சிமிட்டுதல்: வசதியான நிலையில் உட்கார்ந்த பின் கண்களை அகலதிறந்து மிக விரைவாக பத்து முறை கண் சிமிட்டவும். இப்போது கண்களை மூடி 20-25 வினாடிகள் ஓய்வெடுக்கவும். இதே போல ஒரு 5-6 முறை செய்யவும். மேற்காணும் டிப்ஸ்கள் ஐ யோகா என்று குறிப்பிடப்படுகிறது. இவற்றை தினமும் பயிற்சி செய்து, வலிமையான, ஆரோக்கியமான கண்களின் பலன்களை பெறுங்கள்.