அகத்தின் அழகு, முகத்தில் தெரியும் என்பார்கள். அதாவது, நம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்பதற்கான அறிகுறி முகத்தில் தென்படுமாம். அத்தகைய முகத்தில், நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முதல் விஷயம் புன்சிரிப்பு தான். நம் அன்புக்குரியவர்களை, நம் மரியாதைக்கு உரியவர்களை நாம் பார்க்கும் தருணங்களில் சிறு புன்னகை செய்ய நாம் தவறுவதில்லை.
ஆனால், நம் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், புன்னகை செய்வதற்கு கூட பெரும் தயக்கம் இருக்கும். சிலருக்கு மஞ்சள் கறை போல படிந்திருக்கும். இது நம் உடலில் நோய்கள் இருக்கின்றன என்பதற்கான அறிகுறி அல்ல. நாம் உண்ணும் உணவுகள் காரணமாகவே இத்தகைய கறைகள் ஏற்படுகின்றன. ஆம், நம் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு பல உணவுப் பொருள்கள் காரணமாக இருக்கின்றன. உணவில் மாற்றம் ஏற்படுத்தாமல், பற்களை வெண்மையாக மாற்றுவதற்கான மருந்துகள் அல்லது ப்ளீச் சிகிச்சை போன்றவற்றை மேற்கொண்டால் முழுமையான பலன்கள் கிடைக்காது. ஆகவே, பின்வரும் உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும்.
பிளாக் காஃபி : நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய காஃபி என்பது நமக்கு தெரியும். காலையில் எழுந்தவுடன் ஒரு பிளாக் காஃபி அருந்துவதற்கு யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. ஆனால், காஃபியை ரசிக்கக் கூடிய நபர்களுக்கு கெட்ட செய்தியாக அமைவது இது ஒன்று தான். ஆம், நம் பற்களை மஞ்சள் நிறத்தில் மாற்றுவதில் பிளாக் காஃபிக்கு முக்கிய பங்கு உண்டு.