சாப்பிட்ட பிறகு நிச்சயம் பலருக்கும் உடலில் அணுவும் அசையாது என்பதுபோல தான் இருக்கும். அப்படியே கொஞ்சம் படுக்கலாமா என சோம்பேறித்தனமும் ஒட்டிக்கொள்ளும். ஆனால் அவ்வாறு படுத்தால் நெஞ்சு எரிச்சல், வாயு பிரச்னை ஆகியவை வரும். இவற்றையெல்லாம் தவிர்க்க சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் வாக்கிங் செல்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதோடு சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்கும் என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது.
இதை படித்துவிட்டு நீங்களும் வாக்கிங் செல்ல நினைத்தால் முதலில் 5-6 நிமிடங்களுக்கு நடக்க பழகுங்கள். அதேபோல் வேகமாக நடப்பது, ஜாகிங் செல்வது போன்ற முயற்சிகளை செய்யாதீர்கள். அது செரிமானத்தை பாதிக்கும். எனவே முதலில் மிதமான நடைபயிற்சியை 5 நிமிடங்கள் செய்யுங்கள். பிறகு 10 நிமிடங்கள் செய்யலாம். வெளியே நடக்க வசதி இல்லை என்றாலும் வீட்டிற்குள்ளேயே நடக்கலாம்.
இவ்வாறு நடப்பதால் உங்களை அறியாமல் தொற்றிக்கொள்ளும் சோம்பேறித்தனத்தை தவிர்க்கலாம். சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு. எனவே அதையும் இதனால் சரி செய்ய முடியும். நீங்கள் செய்யும் 10 நிமிட நடை பயிற்சியில் வளர்ச்சிதை மாற்றத்திலும் முன்னேற்றம் இருக்கும். கலோரிகளும் குறையும். சர்க்கரை நோய் வருவதையும் தடுக்க முடியும். உடல் முழுவதும் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிட்ட பிறகு 10 நிமிட நடைபயிற்சியை முயற்சிக்கலாம்.