அதிக அளவு வைட்டமின் டி, ஒமேகா-3 மற்றும் வீட்டில் இருந்தபடியே செய்யும் எளிமையான உடற்பயிற்சிகள் ஆகியவற்றின் கலவையானது 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆரோக்கியமான பெரியவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை 61 சதவீதம் குறைக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பிட்ட ஆய்வு, ஃபிரான்டியர்ஸ் இன் ஏஜிங் (Frontiers in Aging) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் ஹெய்க் பிஸ்காஃப்-ஃபெராரியின் கூற்றுப்படி, புகைபிடிக்காமல் இருத்தல் மற்றும் 'சன் ப்ரொடெக்ஷனை' (சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பாக இருத்தல்) போன்ற முன்னெச்சரிக்கை பரிந்துரைகளோடு ஒப்பிடும் போது, புற்றுநோயைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் பொது சுகாதார முயற்சிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. "பெரும்பாலான நடுத்தர வயதுகாரர்கள் மற்றும் முதியவர்கள், ஸ்கிரீனிங் மற்றும் தடுப்பூசி போன்ற தடுப்பு முயற்சிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றும் பிஸ்காஃப்-ஃபெராரி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நடத்தப்பட்ட ஆய்வு, வைட்டமின் டி - புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாக கண்டுபிடித்துள்ளது. இதேபோல், ஒமேகா -3 சாதாரண செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றுவதைத் தடுக்கலாம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடற்பயிற்சியானது நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும், வீக்கத்தை (inflammation) குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் இந்த "மூன்றும்" புற்றுநோயைத் தடுக்க உதவும்.
எவ்வாறாயினும், இந்த மூன்று எளிய தலையீடுகளின் செயல்திறனை தனியாகவோ அல்லது இணைந்தோ நிரூபிக்கும் வலுவான மருத்துவ ஆய்வுகள் போதுமான அளவு இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதே சமயம், அது (கேன்சர்) வளர்ந்த ஒரிஜினல் திசு அல்லது செல்களைக் கடந்து, சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கும் பரவும் ஒரு ஆக்கிரமிப்பு மிகுந்த நோயான புற்றுநோய்களை தடுக்க, மூன்று மலிவான பொது சுகாதாரத் தலையீடுகளின் ஒருங்கிணைந்த பலனை சோதனைக்கு உட்படுத்திய முதல் ஆய்வும் இதுவே ஆகும்.
பிஸ்காஃப்-ஃபெராரி மற்றும் அவரது சகாக்கள், தினசரி அடிப்படையில் அதிக அளவிலான வைட்டமின் டி3 (வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸின் ஒரு வடிவம்), கூடுதல் ஒமேகா-3 மற்றும் ஒரு எளிய உடற்பயிற்சி ஆகிய மூன்றும் - தனித்தனியாகவும் அல்லது இணைந்தும் - புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களை வைத்து நடத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் நடைபெற்ற இந்த மூன்றாண்டு சோதனையில் மொத்தம் 2,157 பேர் கலந்துகொண்டனர்.
இந்த மூன்று சிகிச்சைகளுமே (வைட்டமின் டி3, ஒமேகா-3 மற்றும் உடற்பயிற்சி) ஆக்கிரமிப்பு மிக்க புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைப்பதில் ஒட்டுமொத்த நன்மைகளைக் கொண்டிருப்பதாக ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு சிறிய தனிப்பட்ட நன்மையைக் கொண்டிருந்தன, ஆனால் மூன்று சிகிச்சைகளும் இணைந்தபோது, அதனால் ஏற்படும் பலன்கள் புள்ளிவிவர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அதாவது இந்த மூன்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை 61 சதவிகிதம் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.