வைட்டமின் டி என்பது கொழுப்பு கரைதல் கொண்ட சத்தாகும். இதில் வைட்டமின் டி1, டி2 மற்றும் டி3 ஆகியவையும் உள்ளன. உங்கள் உடல் சூரிய வெளிச்சத்தில் படும்போது, தானாகவே வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது. ரத்தத்தில் போதுமான அளவு வைட்டமின் டி இருப்பதை உறுதி செய்ய நாம் உணவு மற்றும் ஊக்க மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சி, பலம் ஆகியவற்றுக்கும் இது முக்கியமானது. சில வகை நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தர வல்லது. எனினும், வைட்டமின் டி-யை அதிகமாக எடுத்துக் கொண்டால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆகவே, வைட்டமின் டி சத்து குறித்த முறையான தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அதிக வைட்டமின் டி எடுத்துக் கொண்டால் நல்லது : இல்லை. இது உண்மை கிடையாது. வைட்டமின் டி எந்த அளவுக்கு நன்மை அளிக்குமோ, அதே அளவு தீமையும் கொண்டது. 19 முதல் 70 வயது வரையிலான பெரியவர்கள் 15 mcg அளவும், 71 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 mcg அளவும் வைட்டமின் டி எடுத்துக் கொள்ளலாம். 9 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் 4,000 IU அளவில் வைட்டமின் டி எடுத்துக் கொள்ளலாம். அளவு மீறினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.
சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி : ஆம், நமது சருமத்தின் மீது சூரிய ஒளி படரும்போது, அதில் இருந்து வைட்டமின் டி3 உற்பத்தி ஆகிறது. அது நமது கல்லீரலில் இருந்து சிறுநீரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு வைட்டமின் டி ஆக மாறுகிறது. எனினுன், அதிக வெப்பத்தின் பாதிப்புகளை சமாளிக்க பாதுகாப்பான உடைகள் அவசியம்.