இ-சிகரெட் புகைப்பது அல்லது வேப்பிங் பழக்கத்தால் பற்களின் ஆரோக்கியம் மிக கடுமையாக எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தி உள்ளது. வேப்பிங் செய்யும் பழக்கம் கறை படிந்த பற்களுக்கு காரணமாவதுடன் அடிக்கடி பல் மருத்துவரிடம் செல்லும் நிலையையும் உருவாக்கலாம். ஒரு பல்கலைக்கழக பல் மருத்துவமனையில் பற்களின் ஆரோக்கியம் சீர்குலைந்ததற்காக சிகிச்சை பெற்ற ஆயிரக்கணக்கான நோயாளிகளின் ரெக்கார்டஸ்களை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பாய்வு செய்தனர். இதில் வேப்பிங் அல்லது இ-சிகரெட் பழக்கம் இல்லை என்று கூறியவர்களை விட இப்பழக்கங்களை கொண்டவர்களுக்கு பல் சிதைவு மற்றும் பல் சொத்தை ஏற்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் டென்டல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் வேப்பிங் டிவைஸ்களை பயன்படுத்தும் நோயாளிகளுக்கு பல் சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனிடையே CDC ஆய்வுகளின்படி சுமார் 9.1 மில்லியன் அமெரிக்க அடல்ட்ஸ் & 2 மில்லியன் டீனேஜர்ஸ் புகையிலை அடிப்படையிலான வேப்பிங் தயாரிப்புகளை பயன்படுத்துவதால் பற்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.
டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் டென்டல் மெடிசின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆய்வாளர் Karina Irusa கூறுகையில், வேப்பிங் நிச்சயமாக பற்சொத்தைகளை ஏற்படுத்துகிறது என்று கூற முடியாது, ஆனால் இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கலாம் என்று கூறி இருக்கிறார். சூடுபடுத்தப்பட்டு உள்ளிழுக்கப்படும் இ-சிகரெட் அல்லது வேப் திரவமானது, பெரும்பாலும் கிளிசரால் மற்றும் ப்ரோப்பிலீன் கிளைகோல் போன்ற திக் லிக்விட் பேஸ் ஆகும்.இது முழு அளவிலான ஆர்ட்டிஃபிஷியல் ஃப்ளேவர்ஸ் மற்றும் பிற கெமிக்கல்களுடன் கலக்கப்படுகிறது.
வேப்பிங் டிவைஸ்களின் பயன்பாடு நுரையீரல் நோயுடன் தொடர்புடையது என்பதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வேப்பிங் விளைவிக்கும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் வளர்ந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இ-சிகரெட்டைப் பயன்படுத்துவதற்கும் வாய்வழி ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி பல் மருத்துவர்கள் கூட அதிக கவனம் செலுத்தவில்லை. எனவே எங்களது ஆய்வின் அடிப்படையில் பல் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறேன் என கூறி இருக்கிறார் Karina Irusa.
இ-சிகரெட்டைப் பயன்படுத்துவதற்கும் வேப்பிங் செய்வதற்கும், பல் சொத்தைகள் போன்ற பல் சார்ந்த தீவிர பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்துக்கும் இடையே உள்ள தொடர்பை இந்த ஆய்வு தான் முதலில் துல்லியமாக பார்க்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் Karina Irusa. 2019 - 2022-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் டஃப்ட்ஸ் பல் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்ற 16 வயதுக்கு மேற்பட்ட சுமார் 13,000 நோயாளிகளின் டேட்டாக்களை ஆய்வு செய்ததாக கூறிய இவர், இதன் முடிவு 100 சதவீதம் என்பது அல்ல. ஆனால் இது சார்ந்த மேலும் சில ஆய்வுகள் கூடுதல் உண்மைகளை வெளிப்படுத்தும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ள Karina, முன் பற்களின் கீழ் விளிம்புகள் உட்பட பொதுவாக பற்சொத்தைகள் உருவாக்க இடங்களில் கூட வேப்பிங் சிதைவை ஏற்படுத்துவதாக தெரிகிறது. எனவே தங்களிடம் வரும் நோயாளிகளிடம் பல் மருத்துவர்கள் இ-சிகரெட் பயன்படுத்துவது பற்றிய கேள்விகளை எழுப்பி அது சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். பற்சொத்தை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைப் பொறுத்து அதை சரி செய்ய நிறைய நேரம் மற்றும் பணம் செலவாகிறது. பற்சொத்தைகள் அல்லது துவாரங்களை சரி செய்து அடைக்க ஃபில்லிங் செய்தாலும் கூட, இ-சிகரெட் அல்லது வேப்பிங் பழக்கத்தை ஒருவர் தொடர்ந்தால் மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்றும் எச்சரிக்கிறார்.