நம் வீட்டில் தாத்தா, பாட்டி மற்றும் சில சமயம் அப்பா, அம்மாவுக்கு கூட இருக்கின்ற சர்க்கரை நோய் பாதிப்பு வெகுவிரைவில் நம்மையும் தாக்கக் கூடும் என்ற அச்சம் உங்களுக்கு இருக்கக் கூடும். ஆரோக்கியமான வாழ்வில் நடவடிக்கைகள், சீரான உணவு பழக்க வழக்கம், தினசரி உடற்பயிற்சி போன்றவற்றை கடைபிடித்து வந்தாலே எப்போதுமே சர்க்கரை நோய் நம்மை தாக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதே சமயம், சர்க்கரை நோய் நம்மை நெருங்கி வருவதை சில அறிகுறிகள் மூலமாக உணர்ந்து கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதும் அவசியமாகும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் சோர்வு போன்றவை சர்க்கரை நோய்க்கான பொதுவான அறிகுறிகள் என்று எல்லோருக்கும் தெரியும். இது தவிர கீழ்காணும் அறிகுறிகளையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மூச்சில் துர்நாற்றம் : நாம் சுவாசிக்கும் மூச்சில் லேசாக துர்நாற்றம் வீசத் தொடங்கும். ஏனென்றால் நம் உடலில் உள்ள குளுக்கோஸ் சத்துக்களை உடைத்து ஆற்றலாக மாற்றக்கூடிய இன்சுலின் சுரப்பு குறைவதால் நம் உடல் கொழுப்பு சத்துகளில் இருந்து ஆற்றலை பெற தொடங்கும். கொழுப்பு சத்துக்கள் உடையும்போது அதிலிருந்து வெளிப்படும் கீட்டோன் என்னும் சத்து நம் சுவாச காற்றை துர்நாற்றம் கொண்டதாக மாற்றும்.
வாய் வறட்சி : சாதாரணமாக நீர்ச்சத்து குறைபாடு இருக்கும் சமயங்களில் வாய் வறட்சியாக தோன்றலாம். ஆனால், தண்ணீர் அருந்திய சில நிமிடங்களிலும் கூட வாய் வறட்சியாக தோன்றுகிறது என்றால் உங்களுக்கு எச்சில் சுரப்பு குறைய தொடங்கியிருக்கிறது என்று அர்த்தம். உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் எச்சில் சுரப்பு குறையும் என்பதை மறந்து விடக்கூடாது.
பாலியல் ஆற்றல் குறைவு : ஆண்களுக்கு சர்க்கரை நோய் பாதிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு விரைப்புத்தன்மை குறைபாடு மற்றும் பாலியல் ஆசை குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதன் காரணமாக ஆணுறுப்புக்கு ரத்தம் கொண்டு செல்கின்ற நரம்புகளில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் இத்தகைய பிரச்சினை வருகிறது.