உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பல மில்லியன் கணக்கான மக்கள் தலைவலியால் மிகவும் சிரமத்தை சந்திக்கின்றனர். வயது வித்தியாசம் பாராமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஒவ்வொரு விதமாக தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், உடல் அசதி, வெயிலில் செல்வது, வயிற்றுவலி, அடிபட்ட புண்களினால் என தலைவலிக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இவ்வாறு பல காரணங்கள் சொல்லக்கூடிய அதே வேளையில் தலைவலியில் பல வகைகளும் உள்ளன. பல்வேறு வகையான தலைவலிகள் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் நிறைய நேரங்களில் தலை முழுவதும் கடுமையான வலியை உணர நேரிடும். எனவே இந்நேரத்தில் தலைவலியின் வகைகள் மற்றும் குணப்படுத்தக்கூடிய சிகிச்சை முறைகள் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
தலைவலியின் வகைகள் மற்றும் சிகிச்சை முறை : டென்ஷன் வகை தலைவலி: நம்மில் பெரும்பாலோனருக்கு ஏற்படும் தலைவலிகளில் ஒன்று தான் டென்ஷன் வகை தலைவலி. அலுவலகத்தில் வேலைப்பளு மற்றும் வீட்டில் பிரச்சனை போன்ற பல சூழல்களில் நமக்கு ஏற்படும் இந்த தலைவலி லேசானது முதல் மிதமான வலியை நமக்கு ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் தலையைச் சுற்றி இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுகிறது.
ஒற்றைத் தலைவலி : இந்த ஒற்றைத் தலைவலி நமக்கு மிகுந்த வலியை நமக்கு ஏற்படுத்தும். தலையில் ஒரு பக்கத்தில் மட்டும் அதீத வலியை ஏற்படுத்தும் போது குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். காலை உணவைத் தவற விடுதல், குறைவான தூக்கம், மது அருந்துதல் போன்ற காரணங்களால் ஒற்றைத் தலைவலி நமக்கு ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாத பட்சத்தில், 4-7 மணி நேரம் வரைக் கூட இந்த தலைவலி நீடிக்கும். எனவே முறையான சிகிச்சை அளிப்பது முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
தலைவலியின் சில தீவிரமான அறிகுறிகள் இருந்தால், நோயாளிக்கு உடனடி கவனம் மற்றும் சிகிச்சை தேவை. சமீபத்திய ஆய்வில் தலைவலிக்கு மிக அதிக இரத்த அழுத்தம், 50 வயதுக்கு மேற்பட்ட வயது, கர்ப்ப காலத்தில் தலைவலி, தூக்கத்தில் இருந்து எழுந்த தலைவலி, இரட்டை பார்வை, கை மற்றும் கால்களில் பலவீனம் போன்றவை காரணங்களாக அமைவதாக தெரியவந்துள்ளது.
தலைவலிக்கான சிகிச்சைகள் : உங்களுக்கு என்ன வகையான தலைவலிகள் ஏற்பட்டாலும், உடனே நீங்கள் அமைதியான இடத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். அதிகமாக தண்ணீர் குடித்தல், அமைதியாக படுப்பது, குளிர்ந்த துணிணை நெற்றில் வைத்து ஒத்தடம் வைப்பது போன்றவற்றை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நேரங்களில் அதிக தலைவலி ஏற்படும் போது வலி நிவாரண மாத்திரைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.