நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை தான் நீரிழிவு நோய் (Diabetes) என கூறுகிறோம். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான காரணம் இன்சுலின் சரியான அளவு உற்பத்தி ஆகாதது அல்லது உற்பத்தியான இன்சுலினை சரியான அளவு பயன்படுத்த முடியாதது. கணையம் இன்சுலின் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்யும். இது நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையைக் கொழுப்பாகவும், கிளைகோ ஜென்னாகவும் சேமித்து வைக்க உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவின் அளவுக்கு ஏற்றார் போல இன்சுலின் தானாகவே சுரந்து இந்தப் பணியைச் செய்கிறது. இவை சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மரபணு போன்றவற்றால் ஏற்படலாம்.
BMJ-யால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, டைப் 2 நீரிழிவு நோய் (type 2 diabetes) அதிகமாக இளைஞர்களை தாக்குவதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 204 நாடுகளின் நடத்திய ஆய்வில், 1990 முதல் 2019 வரை டைப் 2 நீரிழிவு நோயின் தாக்கம் இளைஞர்கள் (15 முதல் 39 வயது வரை) மத்தியில் 56% உயர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், காற்று மாசுபாடு மற்றொரு பெரிய காரணியாக (type 2 diabetes symptoms) கூறப்படுகிறது. டைப் 2 நீரழிவு நோய்க்கு பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்தது.
இளைஞர்களுக்கு நீரிழிவு நோய் எதனால் ஏற்படுகிறது? : கடந்த 2 ஆண்டுகளில் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் அப்பல்லோ மருத்துவமனையின் உட்சுரப்பியல் மற்றும் நீரிழிவு துறைத் தலைவர் டாக்டர் ரமேஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம், மரபியல், உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் அதிகரித்த மன அழுத்தம் ஆகியவை ஆகும்.
இளைஞரின் பெற்றோரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவு நோயாளியாக இருந்தால், அந்த இளைஞருக்கு நீரிழிவு நோய் இருப்பதற்கு 40 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவேளை, தாய், தந்தை இருவரும் நீரிழிவு நோயாளியாக இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு நீரழிவு நோய் வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர, அதிக கலோரி உணவை உட்கொள்வது, குறைந்த உடல் இயக்கம் மற்றும் மன அழுத்தம் போன்றவை இளைஞர்களுக்கு (ஆண் மற்றும் பெண்) நீரழிவு நோய் ஏற்பட முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? : இளைஞர்களை தாக்கும் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளில் எதிர்பாராத எடை இழப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம் எடுப்பது, திடீர் எடை இழப்பு, மங்கலான பார்வை, கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, சோர்வாக இருப்பது மற்றும் வறண்ட சருமம் ஆகியவை அடங்கும். இது தவிர, பிறப்புறுப்பு தொற்று, பலவீனம் மற்றும் சோர்வு போன்ற பிற அறிகுறிகளும் ஏற்படலாம். குறிப்பாக ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடுகள் ஏற்படும்.
ஒருவர் சர்க்கரை நோய் பற்றி தெரியாமல் எவ்வளவு காலம் இருக்க முடியும்? : சராசரியாக ஒருவர் 2 - 3 மாதங்கள் வரை மட்டுமே நீரழிவு நோய்க்கான அறிகுறிகள் தென்படாமல் இருக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், நீரிழிவு நோய் முதுமை தொடர்பானது மற்றும் இளைஞர்களுக்கு வராது என்ற கட்டுக்கதை நம்புகின்றனர். ஒரு குறிப்பிட்ட வயது வரை மக்கள் நோயைப் பற்றியோ, நோயைத் தூண்டும் வாழ்க்கை முறை பற்றியோ அல்லது நோய்க்கான பாதிப்பை அதிகரிக்கும் ஆபத்துக் காரணிகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா இல்லையா என்பதைக் குறிக்கும் ஒரே சோதனை HbA1C ஆகும். இதன் விகிதம் 5.7 மற்றும் 6.5-க்கு இடையில் இருந்தால், பாதிக்கப்பட்ட நபருக்கு நீரிழிவு இருப்பதை அறிய காலம் எடுக்கும்.
நீரிழிவு நோயாளிகளின் விகிதம் அதிகரிப்பு : நாள்பட்ட நீரிழிவு சிறுநீரக நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல அபாயங்களை அதிகரிக்கிறது. இது நரம்புகளை சேதப்படுத்துவதுடன், பார்வை மங்குதல், கேட்கும் திறன், உடல் இயக்கம் மற்றும் வாய் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். நீரிழிவு நோய் தனிநபரின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோய் வராமல் எப்படி தடுக்கலாம்? : அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள். உடல் பருமன் இன்றைய இளைஞர்களிடையே பெரும் கவலையாக உள்ளது. ஆரோக்கியமான உடல் எடை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். உடல் செயல்பாடு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மற்றொரு தீர்வாகும். ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடம் உடற்பயிற்சி அல்லது வாக்கிங் செல்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
ஆரோக்கியமான உணவு, சர்க்கரை இல்லாத, சர்க்கரை ஏற்றப்பட்ட பானங்கள் அல்லது இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட / தொகுக்கப்பட்ட உணவுகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றை தவிர, சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனைகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க உதவும்.