மஞ்சளில் ஆரோக்கியம் மட்டுமல்ல ஆபத்தும் உள்ளது : யாருக்கு ? எப்போது ? தெரிந்துகொள்ளுங்கள்..!
சளி மற்றும் இருமல் தொந்தரவுக்கு இரவில் சூடான பாலில் மஞ்சள் தூளை சேர்த்து குடிப்பதிலிருந்து, அடிபட்ட காயங்களை ஆற வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
Web Desk | March 24, 2021, 3:14 PM IST
1/ 8
சமையலுக்கு மட்டும் அல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளுக்கு எதிராக போராடி சளி, இருமல் உள்ளிட்ட பலவற்றுக்கு மருந்தாக பயன்படும் மஞ்சளுக்கு நம் வீட்டில் எப்போதுமே தனி இடம் உண்டு. பிரபலமான மசாலா பொருளாக இந்திய உணவு வகைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
2/ 8
நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மஞ்சள் ஒரு மசாலாவாக மட்டும் அல்லாமல் மருத்துவ மூலிகையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் பயனுள்ள ஊட்டச்சத்து மருந்துகளில் ஒன்றாகவும் மஞ்சள் உள்ளது. உடல் மற்றும் மூளைக்கு பல நன்மைகளை தர கூடிய மருத்துவ குணங்களை கொண்ட மஞ்சளானது உணவின் சுவையை கூட்டவும், அழகு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சளி மற்றும் இருமல் தொந்தரவுக்கு இரவில் சூடான பாலில் மஞ்சள் தூளை சேர்த்து குடிப்பதிலிருந்து, அடிபட்ட காயங்களை ஆற வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
3/ 8
மஞ்சளில் உள்ள முக்கிய மூலப்பொருள் குர்குமின்(Curcumin). இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்ட மிகவும் வலுவான ஆக்ஸிஜனேற்றியாகும். முழங்கால் வலிக்கான சிகிச்சை, கொழுப்பளவை நிர்வகிப்பது, இதய நோய் மற்றும் குடல் எரிச்சல் அறிகுறியை குறைக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான நன்மைகள் மஞ்சளில் இருந்தாலும் ஒரு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதால் மஞ்சளை பயன்படுத்தும் போது சிலர் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
4/ 8
கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்: சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளாக மஞ்சள் இருக்கிறது. சமைத்த உணவுகளில் குர்குமின் அளவு குறைவாக இருப்பதால், கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இது பொதுவாக பாதுகாப்பானது என்றாலும் கூட மருந்து வடிவில் மேற்கண்ட பெண்கள் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது இது பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது. ஏனெனில் மாதவிடாயை தூண்டி அல்லது கருப்பையை தூண்டி வயிற்றுக்குள் இருக்கும் கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தி விட கூடும்.
5/ 8
ரத்தப்போக்கு சிக்கல் உள்ளவர்கள்: ரத்தம் தொடர்பான மருந்து எடுத்து கொள்பவர்கள் அல்லது மூக்கிலிருந்து ரத்தம் வழியும் பிரச்னை உள்ளவர்கள் மற்றும் வேறுவிதமான ரத்தம் சம்பந்தமான கோளாறுகளை கொண்டவர்கள் மஞ்சள் எடுத்து கொள்ளும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இதிலுள்ள குர்குமின் ரத்தம் உறைவதற்கான திறனை குறைக்கும் தன்மை உடையது. இதனால் ரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
6/ 8
ரத்த சோகை கொண்டவர்கள் : இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலும் ரத்த சோகை ஏற்படுகிறது. உடல் போதுமான இரத்த சிவப்பணுக்களை உருவாக்காத போது அல்லது ரத்தப்போக்கு காரணமாக உடல் அதிகப்படியான சிவப்பு ரத்த அணுக்களை இழக்கும் போது இது ஏற்படுகிறது. மஞ்சளை அதிக அளவில் எடுத்து கொள்ள்ளும் போது அது உடலுக்கு தேவையான இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கலாம். எனவே இதனால் ரத்த சோகை உள்ளவர்களின் நிலை மேலும் மோசமடையும் வாய்ப்புள்ளது.
7/ 8
நீரிழிவு நோயாளிகள் கவனம் : உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் நீரிழிவு நோயாளிகள். இவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருக்க கூடாது. மஞ்சளில் உள்ள குர்குமின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் உணவில் மஞ்சளை கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.
8/ 8
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் : தாதுக்கள் மற்றும் உப்பு படிவதால் சிறுநீரகங்களில் உருவாகும் படிகங்களே சிறுநீரக கற்கள் எனப்படுகின்றன. கால்சியம் ஆக்சலேட் மிகவும் பொதுவான தாது. இது மஞ்சளில் சற்று அதிகமாகவே உள்ளது. இது கால்சியத்துடன் இணைந்து சிறுநீரக கற்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மஞ்சள் பயன்பாட்டில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.