நீண்ட நேரம் அமர்வது முதல் உடல் உழைப்பு இல்லாதது வரை, பல காரணங்களால் பலரும் தீவிரமான முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். வலி மற்றும் இறுக்கத்தைக் குறைக்க சில நேரங்களில் மருந்துகள் உதவினாலும் அது நிரந்தரமான தீர்வு அல்ல. எந்த வயதினராக இருந்தாலும், முதுகு வலி அன்றாட வேலையைக் கூட செய்ய முடியாத அளவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். முதுகு வலியில் இருந்து முழுமையாக, நிரந்தரமாக நிவாரணம் பெற, யோகா ஆசனங்கள் உதவும்.
குறிப்பட்ட சில யோகா ஆசனங்கள் முதுகுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகளை நெகிழவும் வலுவடையவும் செய்யும். எலும்புகள் உறுதியாகும், உடல் ஸ்ட்ரெட்ச் ஆகும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், தொடர்ந்து செய்யும் போது முதுகு வலி என்பதே காணாமல் போகும். முதுகு மற்றும் இடுப்புப் பகுதிகளில் தசைகளை வலுப்படுத்தி, முதுகு வலியில் இருந்து நிரந்தரமாக விடுபட இந்த எளிமையான ஆசனங்களை முயற்சி செய்யுங்கள்.
பட்சிமோத்தாசனம் (முன்புறமாக வளைதல்) : அமர்ந்த நிலையில் செய்யக்கூடிய இந்த ஆசனம் உங்கள் உடல் முழுவதையும் ஸ்ட்ரெட்ச் செய்யும் என்றாலும், இடுப்புப் பகுதி வலுவாகும். தரையில் கால் நீட்டி உடலை நேராக வைத்து அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளையும் முன்புறமாக நீட்டி உடலை முன்புறமாக வளைக்கவும். உங்கள் நெற்றி பாதங்களின் மீது இருக்க வேண்டும். வளையும் போது முட்டி மடங்காமல் கால்கள் நேராக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் முழுவதுமாக பாதங்களைத் தொடும்வரை உடலை வளைக்க முடியாது. ஆனால் தினமும் செய்தால் படத்தில் இருப்பது போல உடல் வளையும்.
அதோ முக ஸ்வாஸாசனம் : உடலை வளைத்து செய்யும் ஆசனத்தில் இது நின்று கொண்டே செய்யும் வகையாகும். உடலை முன்புறமாக வளைத்து செய்யப்படும் இந்த ஆசனம் மிகவும் பிரபலமானது. உடல் வளைந்த தலைகீழ் V வடிவத்தில் இருக்கும். நேராக நின்று கொண்டு, கைகளை முன்புறமாக ஸ்ட்ரெட்ச் செய்து உடலின் குனிந்து, கைகளை தரையில் ஊன்றிக் கொள்ளவும்.
பாலாசனம் (குழந்தை போஸ்) : குழந்தைகள் முட்டிப் போட்டு முன்புறமாக கவிழ்ந்து படுப்பார்களே, அந்த ஆசனம் தான் இது. முட்டி போட்டவாறு அமர்ந்து, கைகளை முன்புறமாக நீட்டி, உடலை வளைத்து நெற்றி தரையில் படும் வரை (அல்லது உங்களால் முடிந்த அளவு) ஸ்ட்ரெட்ச் செய்யுங்கள்.. தோள்பட்டை முதல் இடுப்புப் பகுதி வரை வலுப்பெறும்.
தனுராசனம் (வில் போன்ற வளைதல்) : கவிழ்ந்து படுத்துக் கொண்டு செய்யும் இந்த ஆசனம் வயிறு மற்றும் இடுப்புக்கு வலு சேர்ப்பதோடு, கொழுப்பையும் கரைத்து, அழகான தோற்றத்தைக் கொடுக்கும். கைகளும் கால்களும் ஸ்ட்ரெட்ச் ஆவதால் முழு உடலுக்குமான பயிற்சியாக இருக்கும். கவிழ்ந்து படுத்துக் கொண்டு, கை மற்றும் கால்களை கொஞ்சம் அகலமாக விரித்துக் கொள்ளுங்கள். கால்களை முட்டி வரை மேற்புறமாக நீட்டிட்டு, உடலை பின்புறமாக வளைக்கவும். கைகளை பின்புறமாக கண்டு சென்று கணுக்கால்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். தலை உயர்த்தி மேலே அல்லது நேராக பார்க்கவும். உடலின் எடை மற்றும் பேலன்ஸ் இரண்டுமே வயிற்றுப் பகுதியில் மட்டுமே இருக்கும்.
சேது பந்தாசனா (பாலம்) : இந்த ஆசனம் பார்ப்பதற்கும் எளிது, செய்வதற்கும் எளிதாக இருந்தாலும், முதுகு வலியில் இருந்து விரைவான தீர்வை வழங்கும். தரையில் நேராக படுத்துக் கொள்ளுங்கள், கால்களை மடக்கி, பாதங்களை தரையில் நன்றாக ஊன்றிக் கொள்ளவும், கைகளை தடைகளுக்கு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கால்கள், கை மற்றும் கழுத்துப் பகுதியில் உடலை பேலன்ஸ் செய்து, இடுப்புப் பகுதியை மட்டும் மேலே தூக்க வேண்டும். இந்த ஆசனம் செய்யும் போதே, இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் ஸ்ட்ரெட்ச் ஆவதை, உடனடியாக வலி மற்றும் இறுக்கம் குறைவதை உணர்வீர்கள்.
புஜங்காசனம் (கோப்ரா போஸ்): புஜங்காசனம் என்பது பாம்பு படமெடுத்து நிற்கும் நிலையை குறிக்கிறது. புஜம் என்றால் தோள் என்பதே பொதுவான பொருள். இந்த ஆசனத்தில் மேல் உடலை இரு கைகளால் தாங்கி நிற்பதால் மணிக்கட்டு, முழங்கை, தோள் பகுதிகள் பலமடைகின்றன.மேலும், உடல் பின்புறமாக வழிவதால், முதுகுப் பகுதியில் உள்ள தசைகள் வலுவடைகின்றன. கவிழ்ந்து படுத்து, கைகளை ஊன்றி, உடலை நிமிர்த்து பின்புறமாக வளைக்கவும்.