உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் போதுமான ஊட்டசத்துக்கள் உடலுக்கு மிகவும் அவசியம். வைட்டமின், தாதுக்கள், புரதம் போன்ற முக்கிய சத்துக்களை நாம் தினசரி குறிப்பிட்ட அளவில் பெற வேண்டும். இதை நாம் சாப்பிடும் உணவு வகைகளின் மூலம் பெரும்பாலும் பெற்று விடலாம். ஆனால், நாம் சாப்பிட கூடிய உணவு வகைகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருப்பதில்லை.
குறிப்பாக புரத சத்தானது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான சத்தாகும். இதை அசைவ உணவுகளில் அதிக அளவில் பெறலாம். இருப்பினும் சைவ உணவுகளிலும் புரதசத்து உள்ளது. ஆனால், பலருக்கும் இது குறித்து தெரிவதில்லை. எனவே இந்த பதிவில் எந்தெந்த சைவ உணவுகளில் அதிக அளவு புரதசத்து உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பருப்பு வகைகள் : நாம் தினசரி சாப்பிட கூடிய பருப்பு வகைகளில் அதிக புரதசத்து உள்ளது. 100 கிராம் பருப்பில் 7-8 கிராம் புரத சத்து கிடைக்கிறது. இதில் கருப்பு பயறு, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், பட்டாணி, பச்சை பயறு, கருப்பு பீன்ஸ் போன்றவை அடங்கும். இவற்றை நமது தினசரி உணவில் சேர்த்து வந்தாலே புரதசத்து எளிதில் கிடைக்கும்.
குயினோவா : இந்த வகை உணவு பொருள் பற்றி பலரும் அறிந்திருப்பது கிடையாது.இது அமராந்த் என்கிற தானிய வகையை சேர்ந்தது. இதில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. நீங்கள் 100 கிராம் குயினோவாவை உட்கொண்டால், அதில் உங்களுக்கு 9 கிராம் புரத சத்து கிடைக்கும். இதை பலவித உணவுகளில் நீங்கள் சேர்த்து கொள்ளலாம். இது மிகவும் சுவையான மற்றும் சத்தான உணவாகும்.
பன்னீர்/டோஃபு : அசைவ உணவுகளை விரும்பாதவர்கள் பன்னீர் போன்ற பால் பொருட்களை தேர்வு செய்து சாப்பிடலாம். நீங்கள் 100 கிராம் பன்னீர் எடுத்து கொண்டால், உங்களுக்கு 16 கிராம் புரதம் கிடைக்கும். அதே போன்று டோஃபு போன்ற உணவுகளில் அதிக அளவில் புரதம் உள்ளது. 100 கிராம் டோஃபு சாப்பிட்டால், 8 கிராம் புரதம் உங்களுக்கு கிடைக்கும்.