அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதே போல, அகத்தின் ஆரோக்கியமும் முகத்தில் தெரியும். உங்கள் முகம் உங்கள் உடல்நலத்தை பற்றி கூறுவதென்ன? என்பது குறித்து இங்கு காண்போம். உங்கள் உடலில், நீங்கள் நாளொன்றுக்கு பல முறை பார்ப்பது பராமரிப்பது உங்கள் முகம் தான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒருவரைப் பற்றிய முழு விவரங்களையும் முகத்தின் வழியே அறிந்து கொள்வது வழக்கம். முகத்தைப் பார்த்தே ஒருவரை பற்றி கூறிவிடலாம் என்பது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் இருக்கின்றது. ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது மனம் சோர்வாக இருக்கும் போதெல்லாம் முகமும் மிகவும் சோர்வுற்றதாக தோன்றுகிறது. இதற்கு நேர்மாறாக, மகிழ்ச்சியான காலங்களில், திருப்தியாக இருக்கும் சமயத்தில் முகம் ஒளிரும். எனவே உங்கள் உடல்நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள உங்கள் முகம் உதவி செய்யும், அதற்கான சில குறிப்பிடத்தக்க காரணிகள் இங்கே...
மஞ்சள் நிறத்தில் முகம் மற்றும் கண்கள் : முகமும், கண்களும் மஞ்சள் நிறத்தில் இருப்பது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகும். உங்கள் உடலில் ஏராளமான கழிவு பொருட்கள் சேர்க்கையும், சிவப்பு ரத்த அணுக்கள் சிதைவதாலும் முகம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாகத் தெரிகின்றன. மஞ்சள் காமாலை நோயால், வைரஸ் தொற்று (ஹெபடைடிஸ், மோனோநியூக்ளியோசிஸ்), கல்லீரல், பித்தப்பை, அல்லது கணையக் கோளாறுகள் அல்லது லிவர் சிரோசிஸ் போன்ற பல கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
முகத்தில் உள்ள முடி உதிர்தல்: அலோபேஷியா என்பது அதிகப்படியான முடி உதிர்வைக் குறிப்பதாகும். பொதுவாக பெண்களிடையே ஏற்படும் அதிகப்படியான கூந்தல் உதிர்வைக் குறிக்கும் இந்த கோளாறு, கூந்தல் அல்லது தலைமுடி என்பதைத் தாண்டி, புருவம், கண்ணிமைகள் மற்றும் தாடி என்றும் பாதிக்கிறது. புருவ அடர்த்தி குறைதல், கண்ணிமைகள் அடிக்கடி உதிர்வது அல்லது திட்டு திட்டுகாக தாடி அல்லது மீசையில் முடி உதிர்தல் போன்றவை அலோபேஷியா அரேட்டா (alopecia areata) பாதிப்பை சுட்டிக் காட்டுகிறது. இதற்கான காரணம், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு. இது உங்கள் முடிக் கற்றைகளை பாதிக்கிறது. எனவே, முகத்தில் இருக்கும் இமை, புருவம், தாடி போன்ற இடங்களில் அதிகப்படியான முடி உதிர்வு காணப்படுகிறது. இதற்கான தீர்வு, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் டானிக்குகள் ஆகியவற்றை உட்கொள்வது, இழந்த முடிகள் மீண்டும் முளைக்க உதவும். வீக்கமான கண்கள் ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லை என்றாலே கண்களில் அதன் பாதிப்புத் தெரியும். இதற்கான காரணம், கண்களுக்குக் கீழே திரவம் தேங்குவது தான். இது கண்கள் வீங்கிய தோற்றத்தைக் கொடுக்கும்.
கண்கள் வீக்கம் என்பதற்கான சில காரணங்கள்: தூக்கமின்மை, அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்ட உணவை உண்ணுதல், ஹார்மோன் மாற்றங்கள், வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை, முதுமை - உங்கள் கண் இமைகளை ஆதரிக்கும் தசைகள் வயதாகும் போது தளர்வடையும், ஒவ்வாமை, மேக்கப், சோப்பு அல்லது கிளென்சர் பயன்படுத்துவது, வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது.
முகத்தில் முறையற்ற முடி வளர்ச்சி: தேவையில்லாத இடங்களில் முடி வளர்வதும், தேவையான இடங்களில் வளராமல் இருப்பதும், எரிச்சலூட்டுவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத விதமாக, ஆண்களுக்கு காதுகளைச் சுற்றியும், பெண்களுக்கு புருவங்கள் அல்லது கன்னத்தைப் சுற்றியும் காணப்படலாம். இது தீவிரமானது அல்ல. அதே போல, அப்படியே விட்டுவிடவும் முடியாது. முகத்தில் முறையற்ற முடி வளர்ச்சி, தோற்றத்தை பாதித்தாலும், பெண்களில் இது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) உடல்நலக் குறைப்பாடு இருப்பதற்கான அறிகுறியாகும்.
வறண்ட மற்றும் இரத்தம் கசியும் உதடுகள்: செதில் செதிலாக காணப்படும் வறட்சியான அல்லது உலர்ந்த உதடுகள் குளிர்காலத்தில் அதிகமாக காணப்படுகின்றன. பெட்ரோலியம் ஜெல்லி, தேங்காய் எண்ணெய், லிப் க்ரீம்கள் உங்கள் உதடுகளை பாதுகாக்கவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும். உடலில் நீரிழப்பு, ஒவ்வாமை அல்லது ஸ்டெராய்டுகள் போன்ற மருந்தின் எதிர்வினை போன்ற சில உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இது காணப்படுகிறது.
தழும்பு போன்ற மச்சங்கள்: தழும்பு போன்ற சிறு சிறு மச்சங்கள் முகத்தில் இருக்கக்கூடும். சிலருக்கு பிறக்கும் போதே இருக்கும் பிறப்பு அடையாளமாக இருக்கும். மற்றும் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. இருப்பினும், அவற்றின் நிறம், வடிவம், அளவு அல்லது உங்கள் சருமத்தில் எப்படி உணர வைக்கிறது (சென்சேஷன்) என்பதைப் பொறுத்து, உங்கள் முகத்தில் அசாதாரணமான ஏதோ இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இந்த மச்சங்கள் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.
கொப்புளங்கள் : கொப்புளம் அல்லது வாய்ப்புண் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வகை 1 வைரஸால் உருவாகின்றன. வாய்வழி ஹெர்பெஸ் மிகவும் பரவலாகக் காணப்படுவதாக இருக்கும் இந்த தொற்றுநோய், உமிழ்நீர் அல்லது உடல் திரவம் மூலம் பரவுகிறது. இந்த நோய்த்தொற்றுக் கிருமி மனித உடலுக்குள் அதன் வாழ்நாள் முழுவதும் செயலற்ற நிலையில் இருக்கும். ஒரு நபர் மனச்சோர்வடைந்தால், நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது சோர்வாக இருக்கும்போது வைரஸ் ஆக்டிவ் ஆகி, புண்கள் போன்ற அறிகுறிகளை உருவாக்குகிறது.
இமை வாதம் (Ptosis) : தசைகளுக்கு ஏற்படும் பக்கவாதத்தினால், கண்ணின் மேலிமை பாதிப்புக்குள்ளாகும். பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் இந்த நோய், டோடோசிஸ் அல்லது பிளெபரோப்டோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது பிறந்ததிலிருந்தே இருந்திருக்கலாம் மற்றும் பொதுவாக தீங்கற்றதாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இது உங்கள் மூளை, நரம்புகள் அல்லது கண் சாக்கெட் ஆகியவற்றில் ஏதேனும் சிக்கல் ஏற்படுவதைக் குறிக்கலாம். பலவீனமான தசைகள், உணவு அல்லது தண்ணீர் விழுங்குவதில் சிக்கல், கடுமையான தலைவலி அல்லது இரட்டைப் பார்வை ஆகிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே அணுகவும்.
கண் இமைகளில் ஏற்படும் சிறிய கட்டிகள்: சாந்தெலாஸ்மா (Xanthelasma) என்பது ஒரு மஞ்சள் நிறத்தில், சிறிய கட்டி போல கண்களின் மேல் மற்றும் கீழ் இமைகள் மற்றும் இமைகளைச் சுற்றிலும் தோன்றும். இவை கொழுப்பால் ஆனவை. இவ்வகையான கொழுப்பு கட்டிகள் தீங்கு விளைவிக்காது அல்லது வலியும் ஏற்படுத்தாது. இவற்றை அகற்றிட முடியும். இவை சில நேரங்களில் இதய நோய் அல்லது ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறிக்கலாம்.