நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். நம் உடம்பில் நாள்தோறும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு உருவாவதால், அதனை வெளியேற்றி அதிக ஆக்சிஜனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு காலை மாலை என இரு வேளைகளிலும் ஒட்டப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஆனால், சிலருக்கு ஓடும்போது மூச்சுத் திணறல் ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் இந்த டிப்ஸை பின்பற்றினால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாது.
வார்ம் ஆப் : நம் உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது தசைகளுக்கும், திசுக்களுக்கும் செல்லும் ரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். திடீரென ஓடத்தொடங்கும்போது உடல் இயக்கத்துக்கு ஏற்ப அனைத்து நரம்புகளும் இயங்க ஒத்துழைக்காது. இதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு விரைவாக களைப்பு ஏற்படும் அல்லது நீண்ட நேரம் ஓட முடியாது. எனவே, ஓடத்தொடங்குவதற்கு முன்னர் நம் தசைகளையும், நரம்புகளையும் இலகுவாக்க வார்ம் ஆப் (Warm up) செய்வது நல்லது.
இடைவெளி எடுக்கலாம் : வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது ஒருவருக்கு ஏற்படும் மூச்சுத்திணறலை குறைக்க சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் சுவாசம் மீண்டும் சீராகி மூச்சுத்திணறல் ஏற்படாது. ஓட்டைத்தை நிறுத்தியும் இடைவெளி எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஓட்டத்தின் வேகத்தை குறைத்து மெதுவாகவும் ஓடலாம். அப்போது, வேகமாக துடித்துக்கொண்டிருக்கும் இதயம் மற்றும் நுரையீரல் இயல்பு நிலைக்கு திரும்பும். இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் மூச்சு திணறல் பிரச்சனையை தவிர்க்க முடியும்.
மூச்சுப்பயிற்சி : நாள்தோறும் மூச்சுப்பயிற்சி செய்தால் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடு நன்றாக இருக்கும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து 10 நொடிகள் வைத்திருக்க வேண்டும். பின்னர், வாய்வழியாக அதனை வெளியேற்ற வேண்டும். இதன்மூலம் உடலில் உள்ள கார்பன் டை ஆக்சைடை அதிகளவில் வெளியேற்ற முடியும். நீண்ட நாள் மூச்சுத் திணறல் என்பது நுரையீரல் மற்றும் இதயம் சார்ந்த நோய்களின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது.
மூச்சுக்குழாய் பிரச்சனைகள் : அதிகப்படியான உடற்பயிற்சிகள் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். இதனால் உங்களின் சுவாசக்குழாய் பாதிப்படைந்து மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். மூச்சுத்திணறல், சோர்வு, தொடர் இருமல் ஆகியவை ஓட்டப் பயிற்சியின்போது ஏற்பட்டால் சுவாசக் குழாயில் பிரச்சனைகள் இருப்பதற்கான அறிகுறியாகும். இதனால், இத்தகைய அறிகுறிகள் உடையவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவைமட்டுமல்லாது, ஓட்டப்பந்தய வீரர்கள் dyspnoea மற்றும் சுவாச இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். மேலும், இரும்புச்சத்து குறைபாடு, தசை பலமிழப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்படுவதால் அதிகமான ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.