குளிர் காலத்தில் வெப்பநிலை மிக, மிக குறைவாக இருக்கும். இந்த சமயத்தில் மக்களின் வாழ்வியல் நடவடிக்கைகள் மற்றும் அன்றாட கடமைகளில் பலவித மாற்றங்கள் ஏற்படும். உதாரணத்திற்கு நீங்கள் உடற்பயிற்சி செய்கின்ற நேரம், உங்களுக்கு பசி எடுக்கின்ற சமயம் போன்றவை மாறுபடும். இன்னும் சொல்லப்போனால் உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள் கூட மாறுபடும்.
குளிர் காலங்களில் நாம் மிகுந்த சோம்பலுடன் தென்படுவோம் மற்றும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி விடுவோம். குறிப்பாக ஸ்வெட்டர் மற்றும் போர்வை போன்றவற்றின் பாதுகாப்பு அரணுக்குள் நம்மை வைத்துக் கொள்வோம். ஆக, உடல் இயக்கமற்ற இந்தச் சூழலில் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கின்றன. இதனை தடுப்பதற்கு பின்வரும் முயற்சிகளை கையாள வேண்டும்.
ஆரோக்கியமான உணவு முறை : சூடான சாக்கலேட் சாப்பிடுவதற்குப் பதிலாக க்ரீன் டீ அல்லது சூடான காய்கறி சூப் போன்றவற்றை மாலை நேரத்தில் அருந்தலாம். உணவுக்கு பதிலாக ஆரோக்கியமான பானங்கள் மூலம் வயிற்றை நிரப்புவதால் பசி அடங்கிப் போகும். பதப்படுத்தப்பட்ட மற்றும் ஃபிரை செய்யப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தாவரங்கள் அடிப்படையிலான உணவுகளை அதிகமாக உட்கொள்ளவும்.
சுறுசுறுப்பாக இயங்குவது : குளிர்கால சோம்பலில் நாம் முடங்கி விடக் கூடாது. உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நீங்கள் யோகா செய்யலாம். சில சமயம், மாடி படிக்கட்டுகளில் ஓரிரு முறை ஏறி, இறங்கலாம். வெளிப்புறத்தில் குளிர் அதிகமாக இருப்பின் உள் அரங்கு பயிற்சிகளை முயற்சி செய்யலாம்.
உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் : குளிர் காலத்தில் நம் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வது முக்கியமானதாகும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் பாதங்களை சூடாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சூடான சூப் அருந்தலாம் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து மசாஜ் செய்யலாம்.
ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்ய வேண்டும் : பருவநிலை மாற்றம் காரணமாக நம் உடலில் இன்சுலின் சுரக்கும் திறன் குறைவாக இருக்கும். ஆகவே, அவ்வபோது ரத்த பரிசோதனை செய்து சர்க்கரை அளவை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் அளவை தூண்டுகின்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக, உடலை வெப்பமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.