உடல் உஷ்ணமும், வியர்வையும் உங்கள் எண்ண ஓட்டத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு கோடைகால உடல்சோர்வையும் கொடுக்கும். இது மட்டுமல்லாமல் உடலின் அந்தரங்க பகுதிகளில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழலில், கோடை காலத்தில் மாதவிலக்கு தொடர்புடைய பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
நாப்கின்களை மாற்றுவது அவசியம் : மாதவிலக்கு காலத்தில் உங்களது நாப்கின் பேட்-களை 2 அல்லது 4 மணி நேரத்திற்குள்ளாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். மாதவிலக்கின் அனைத்து நாட்களிலும் இதை பின்பற்ற முடியாவிட்டாலும் கூட, உதிரப்போக்கு அதிகம் நடைபெறும் முதல் இரண்டு நாட்களுக்காவது இதை கட்டாயம் செய்ய வேண்டும்.
பயோ, காட்டன் நாப்கின்களை பயன்படுத்தலாம் : இயற்கையாக மக்கும் தன்மை (பயோடீக்ரெடிபிள்) கொண்ட அல்லது காட்டன் நாப்கின்களை இந்த கோடை காலத்தில் பயன்படுத்தலாம். இயல்பாகவே சாஃப்டாக இருக்கும் இந்த வகை நாப்கின்கள் உங்களுக்கு அரிப்பு, எரிச்சல் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தாது.சுற்றுச்சுழலை பாதிக்காத, சிலிக்கான் பொருளால் செய்யப்பட்ட ‘மாதவிலக்கு கப்’ பயன்படுத்துவது இன்னும் நல்ல பலனை கொடுக்கும். நாப்கின் மற்றும் டேம்போன்ஸ் ஆகியவற்றைக் காட்டிலும் இதன் விலை கட்டுபடியான அளவில் தான் இருக்கிறது.
இரண்டு பேட்களை பயன்படுத்தக் கூடாது : மாதவிலக்கு காலத்தில் இரண்டு பேட்களை ஒரே சமயத்தில் பயன்படுத்துவது நல்லதல்ல. முதல் 2 அல்லது 3 நாட்களில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் சமயத்தில் அதை சமாளிக்கவும், உடைகளில் கறை படிவதை தவிர்க்கவும் பெண்கள் சிலர் இரண்டு பேட்களை ஒரே சமயத்தில் உபயோகிக்கின்றனர். ஆனால், பெண்ணுறுப்பு பகுதியில் இது நோய்த்தொற்று ஏற்படுத்தக் கூடும் என்பதால், இது நல்ல. அதற்குப் பதிலாக, உதிரப்போக்கு அதிகமாக வரும் சமயங்களில் பேட் மாற்றிக் கொள்வது நல்லது.
நீர்ச்சத்து அவசியம் : கோடை காலத்தில் வயிறு உப்புசம், செரிமாணக் கோளாறு, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் அல்லது தசை பிடிப்பு போன்ற பிரச்சினைகளை தவிர்க்க நீர்ச்சத்து மிக அவசியமானது. குறைந்தபட்சம் 9 முதல் 10 கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும். மாதவிலக்கு காலத்தில் எடை தூக்கும் பயிற்சி போன்ற கடினமான விஷயங்களை தவிர்த்து விட்டு யோகா, வேகமான நடைபயிற்சி போன்ற எளிய பயிற்சிகளை செய்யலாம்.