ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்ப காலகட்டம் என்பது மிக முக்கியமான தருணம் ஆகும். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் எண்ணற்ற மாற்றங்களை இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொதுவாகவே கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு அடுத்தபடியாக உடல் எடை அதிகரிக்கும்.
இந்த தருணத்தில் இரண்டு உயிர்களுக்கு சேர்த்து சாப்பிட வேண்டிய கட்டாயம் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் டயட் திட்டங்களையும் பின்பற்ற முடியாது. அதே சமயம் உடல் எடை அதிகரித்தால் கர்ப்ப கால நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் உடல் எடை அதிகரிப்பதை தவிர்த்து, ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கான ஆலோசனைகளை இப்போது பார்க்கலாம்.
உணவின் அளவை குறைத்து எடுத்துக் கொள்ளலாம் : ஒரே சமயத்தில் வயிறு நிரம்ப சாப்பிடுவதை காட்டிலும் உணவை கொஞ்சம், கொஞ்சமாக பிரித்துக் கொண்டு போதிய கால இடைவெளியில் சாப்பிடலாம். இதன் மூலமாக உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்கின்ற அதே சமயத்தில், சிசுவுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் சென்றடைய வழிவகை ஏற்படும்.
நீர்ச்சத்து : கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சோர்வு, தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். ஆகவே கர்ப்ப காலத்தில் ஏராளமான தண்ணீர் அருந்த வேண்டும். அதேபோல தர்பூசணி, இளநீர் போன்ற இயற்கையான நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
உடல் எடையை கண்காணிக்கவும் : என்னதான் நீங்கள் ஆரோக்கியமாக இருந்து வந்தாலும் கர்ப்ப காலத்தில் அவ்வபோது உடல் எடையை பரிசோதனை செய்ய வேண்டும். வயிற்றில் வளரக்கூடிய சிசு மற்றும் கர்ப்ப கால மாற்றங்கள் காரணமாக உங்கள் உடல் எடை இயல்பாகவே கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆனால், அளவுக்கு அதிகமான உடல் எடை அதிகரிப்பு இருந்தால் அது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்து தகுந்த வாழ்வியல் மாற்றங்களை கடைப்பிடிக்கவும்.