பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அவருடைய நடிப்பு திறமைக்கு எந்த அளவு ரசிகர்கள் உள்ளனரோ, அதைவிட அவரின் அழகான கட்டுமஸ்தான உடற்கட்டமைப்பிற்கும் ரசிகர்கள் மிகவும் அதிகம். நம்மில் பலரும் தொப்பையை குறைத்து சிக்ஸ் பேக் வைக்கவே கஷ்டப்படும் நிலையில், இந்த மனிதரோ மிக அசால்டாக 8 பேக் உடற்கட்டில் வளம் வருகிறார். உடலை கட்டுமஸ்தாக வைத்திருப்பது பார்ப்பதற்கு மிக எளிமையாக தோன்றினாலும் அதற்கு மிகக் கடுமையான முயற்சிகளும் ஒழுக்கமும் தேவைப்படுகிறது.
அதிலும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த வயதிலும் தனது உடற்கட்டை சற்றும் குறையாமல் வைத்திருப்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். உடலை ஃபிட்டாக வைத்திருப்பதற்கு அனைவரும் ஒவ்வொரு விதமான வழியை கூறுகின்றனர். முக்கியமாக வெறும் உடற்பயிற்சிகள் மூலம் மட்டுமே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியாது. சரியான உடற்பயிற்சி, அதனுடன் ஆரோக்கியமான சாப்பாடு மற்றும் சுய ஒழுக்கம் ஆகிய அனைத்துமே சரியாகப் பின்பற்றினால் மட்டுமே உடலை சரியாக பராமரிக்க முடியும். ஷாருக்கான் போல 8 பேக் வைக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
குறுக்குவழி கூடவே கூடாது : இன்றைய சூழலில் ஜிம்மிற்கு செல்லும் பல்வேறு இளம் வயதினரும் மிக விரைவாக கட்டுமஸ்தான உடலை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல்வேறு வித ஸ்டெராய்டுகளையும் புரோட்டின் பவுடர்களையும் உபயோகப்படுத்துகின்றனர். இவை மிக குறுகிய காலத்தில் பலனை கொடுத்தாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் நீண்ட காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். நல்ல உடற்பயிற்சிக்கு ஆரம்பமாக 20 நிமிடம் கார்டியோ செய்வதே போதுமானது ஆகும். இதைத்தவிர உறுதியான ஆப்ஸ் பெறுவதற்கு வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்பது இல்லை. ஒட்டுமொத்த உடலுக்கான உடற்பயிற்சி சரியாக மேற்கொண்டாலே வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளும் அதற்கு ஏற்ப உறுதியாக மாறும்.
சரியான உணவு பழக்கம் : உண்மையில் உடற்பயிற்சி அதிகளவு செய்வதை விட உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய கால இளைஞர்கள் பலரும் புரோட்டின் பவுடர்களை அதிக அளவில் உபயோகிக்கின்றனர். ஆனால் அதற்கு பதிலாக இயற்கையான உணவுகளை நம்முடைய தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் தேவைக்கு அதிகமான உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் தேவையான அளவு மட்டும் உணவு உட்கொள்வதும் கட்டுமஸ்தான உடற்கட்டை பெறுவதற்கு வழிகள் ஆகும். ஒருவேளை உங்களுக்கு என்ன விதமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுப்பது என்பதை பற்றிய தெளிவு இல்லை என்றால் மருத்துவரின் ஆலோசனை பெறலாம்.
போதிய அளவு உறக்கம் : உடலை ஆரோக்கியமாக பேணிக் காக்க வேண்டும் எனில் போதுமான அளவு உறங்குவது அவசியம். எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் சரியாக உறங்கினால் மட்டுமே தசைகளுக்கு போதுமான ஓய்வு கிடைத்து அவை நன்றாக உறுதியாக வளர்வதற்கு வழி கிடைக்கும். சரியாக உறங்காமல் இருப்பதினால் வளர்ச்சிதை மாற்றங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதையும் அதிக அளவிலான உடல் பருமன் மற்றும் நீண்ட கால அடிப்படையில் உடலில் ஏற்படும் கோளாறுகள் ஆகியவை உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். எனவே உங்களது உடற்பயிற்சி உங்களுக்கு கை கொடுக்க வேண்டும் எனில் அதற்கு தேவையான அளவு உறங்குவதும் அவசியம்.