நோய்கள் பலவிதத்தில் உருவாகி நம்மை தாக்குகின்றன. அவற்றில் சில நோய்கள் குறைந்த நாட்களிலேயே நம்மை விட்டு நீங்கி விடும். ஆனால் பல முக்கியமான நோய்கள் நம்மை நீண்ட காலமாக பாதித்து உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக கெடுத்து விடக்கூடும். அந்த வகையில் தைராய்டு நோயும் அடங்கும். இது ஆண்களை காட்டிலும் பெண்களை அதிக அளவில் பாதிக்க கூடியதாக இருக்கிறது.
தைராய்டு நோய் இரண்டு வகையாக உள்ளது. உடலில் கழுத்து பகுதியில் தான் இந்த தைராய்டு ஹார்மோன் சுரக்கும். இவற்றின் அளவு குறைந்தால் அதை ஹைபோதைராய்டிசம் என்று கூறுவார்கள். இதனால் உடல் பருமன், மாதவிடாய் தடைபடுதல், தோல் வறட்சி, மலச்சிக்கல், மன அழுத்தம், மூட்டு வலி, முடி உதிர்வு போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இவற்றில் இன்னொரு வகை ஹைப்பர் தைராய்டிசம். உடலில் அதிக அளவில் தைராய்டு சுரந்தால் உடல் எடை உடனடியாக குறைந்து மெலிந்து போக செய்யும். இவை இரண்டுமே ஒருவருக்கு பல பாதிப்புகளை தர கூடியவை.
மாதவிடாய் : பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராததற்கு தைராய்டு மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தைராய்டு நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை நேரடியாக பாதிக்க செய்து பல்வேறு பிரச்சினைகளை உடலுக்கு உண்டாக்குகிறது. மேலும் பெண்களின் கருப்பையை பாதிக்கவும் செய்கிறது. இதனால் மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக 40 வயதை தாண்டிய பெண்களுக்கு தைராய்டு நோய் பெரிய அளவில் உடலில் பாதிக்க கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தை பிறப்புக்கு பின் : தைராய்டு நோய் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் பல சிக்கல்கள் உருவாகும். குறிப்பாக சரியான கரு வளர்ச்சி இல்லாதது, குறை மாதத்தில் குழந்தை பிறத்தல், குழந்தை அதன் செயல்பாடுகளை மெதுவாக செய்தல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில குழந்தைகளுக்கு தீவிரமான நோய் பாதிப்புகளையும் இது தரும்.
சிகிச்சை : உங்களுக்கு தைராய்டு நோய் உள்ளதா என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இரத்த பரிசோதனை போன்ற எளிய முறைகளின் மூலம் ஒருவருக்கு உள்ள தைராய்டு அளவை கண்டறிய முடியும். மேலும் அவற்றின் அளவில் குறைபாடு இருந்தால் உங்களின் மருத்துவரை அணுகி தேவையான வழிமுறைகளை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். தொடர்ச்சியான மருத்துவ முறைகள் மட்டுமே தைராய்டை சீராக வைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றுடன் சரியான உணவு முறையையும் பின்பற்றி இந்த நோயில் இருந்து விடுபடலாம். குறிப்பாக பெண்கள் உடலில் மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக செயல்பட வேண்டும். இல்லையேல் பல்வேறு எதிர்கால பாதிப்புகள் உருவாக கூடும்.