உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கும். பாலிவுட் திரைப்பட நடிகைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதிலும், திரையுலக நட்சத்திரங்கள் என்றாலே அன்றைய டிரெண்டிற்கு தகுந்தபடி தங்களை வடிவமைத்துக் கொள்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது ஃபேஷன் ஆகட்டும் அல்லது உடற்பயிற்சி, அழகு அல்லது உணவுக் கட்டுப்பாடு என எதுவானாலும் அன்றைய அப்டேட்டிற்கு தகுந்தாற்போல இருப்பார்கள்.
சோனாக்ஷி சின்ஹா : தன் உடல் எடையில் சுமார் 30 கிலோ அளவுக்கு குறைத்து பாலிவுட் திரையுலகில் தன் மீதான கவனத்தை ஈர்த்தவர் சோனாக்ஷி சின்ஹா. அவர் துரித உணவுகளை தவிர்த்ததோடு மட்டுமல்லாமல் மாவுச்சத்து, ஆர்டிஃபிஷியல் ஸ்வீட்னர் போன்றவற்றையும் கைவிட்டு புரத உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டார். இது மட்டுமல்லாமல் கடுமையான உடற்பயிற்சி, காலையில் கிரீன் டீ அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். காலையில் கோதுமை ரொட்டி, பால் அல்லது செரல், மதிய உணவுக்கு ரோடி, சப்ஸி மற்றும் சாலட், இரவு உணவுக்கு பருப்பு, சிக்கன், மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்.
ஜாக்குலின் பெர்ணாண்டஸ் : இவர் ஜிம் பக்கம் சென்றதே இல்லையாம். ஆனால், உணவில் கடுமையான கட்டுப்பாடு கொண்டவர். அதே சமயம், வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். காலையில் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர், மதியம் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுகிறார். இரவு உணவை 7 மணிக்கு முடித்துக் கொள்கிறார்.
பரினீதி சோப்ரா : பாலிவுட் ரசிகர்களை தன்னுடைய எடை குறைப்பு மூலமாக ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியவர். சுமார் 86 கிலோ எடை கொண்டவராக இருந்த நிலையில், அவரது இடுப்பு அளவு 38 இன்ச் ஆக இருந்தது. தற்போது 30 இன்ச் அளவிலான உடைகளே போதுமானதாக இருக்கிறதாம். உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தது மட்டுமல்லாமல், கேரள பாரம்பரிய கலையான களரிபயட்டு கலையை கற்றுக் கொண்டுள்ளார். சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் மிகுந்த கவனம் உடையவர். பிரவுன் அரிசி, காய்கறிகள், கீரைகள் மற்றும் சாக்கலேட் ஷேக் போன்றவற்றை சாப்பிட்டு உடல் எடையை குறைத்திருக்கிறார்.