

உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றாலும், நமக்குள் இருக்கும் சோம்பல் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதை தடுத்துவிடுகிறது. உடல் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது அல்லது பிறருக்கு ஏற்படும்போது, இனிமேல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என சபதம் எடுத்து சில நாட்கள் செய்து, இடையில் நிறுத்திவிடுவது பலருக்கும் வாடிக்கையாக உள்ளது.


ஆனால், நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், உடற்பயிற்சி செய்வதை திடீரென நிறுத்தினால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். உடனடியாக அல்லது நீண்டகால இடைவெளியில் உடற்பயிற்சியை நிறுதியதற்கான விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.


பிட்னஸ் லெவல் குறையும் : உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து சில நாட்கள் கழிந்தபிறகு, புத்துணர்ச்சியுடன் இருப்பதை நம்மால் உணர முடியும். ஆனால், பலர் அந்த புத்துணர்ச்சியுடன் உடற்பயிற்சி செய்வதை படிப்படியாக குறைக்க தொடங்கிவிடுவார்கள். ஒரு கட்டத்தில் முழுமையாக உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிடுவார்கள். இதனால், உங்களின் பிட்னஸ் லெவல் குறையும். ஒரே நாளில் பிட்னஸ் லெவல் குறையாது. படிப்படியாக குறைந்துவிடும்.


உடல் எடை கூடும் : நாள்தோறும் நீங்கள் செய்துவந்த உடற்பயிற்சியால், உங்கள் உடம்பில் கழிவுகள் அதிகளவில் சேர்ந்திருக்காது. தசைகள் தேவையற்ற கலோரிகளை எரித்திருக்கும். படிப்படியாக உடற்பயிற்சி நிறுத்தப்படும்போது, அதிகப்படியான கலோரிகளை எரித்துவந்த தசைகளின் செயல்பாடு நாளடைவில் குறைந்துவிடும். இதனால் உங்களின் உடலில் வளர்ச்சிதை மாற்றம் குறைந்து, உடல் எடை அதிகரிக்கும்.


ரத்த அழுத்தத்தில் மாற்றம் : உடற்பயிற்சியை நிறுத்துபவர்கள் உடனடியாக எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனை இது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்துவரும்போது அதற்கேற்ப ரத்த ஓட்டம் உடம்பில் இருக்கும். நீங்கள் உடற்பயிற்சியை நிறுத்தும்போது, நரம்புகளின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும் என்பதால், அதற்கேற்ப ரத்த ஓட்டத்திலும் மாற்றம் ஏற்படும். அதாவது, உடல் இயக்கத்துக்கு ஏற்ப சீராக இருந்த ரத்த ஓட்டம், உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும்போது ரத்த அழுத்தமாக மாறிவிடும். இவை இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது இரு வாரங்களாவது எடுத்துக்கொள்ளும்.


மூச்சுவிடுவதில் சிரமம் : பிட்னஸாக இருக்கும்போது தூரமாக நடந்து செல்வது, படிக்கட்டுகள் ஏறுவது எளிதாக இருக்கும். ஆனால், உடற்பயிற்சியை நிறுத்தும்போது நீங்கள் முன்பு இருந்ததைப்போல் ஆக்டிவாக இருக்க முடியாது. இதற்கு முக்கிய காரணம், உடலுக்கு தேவையான சக்தியை ஆக்சிஜனில் இருந்து பெற்றுவந்த தசைகளால், உடற்பயிற்சி நிறுத்தும்போது அதனை செய்ய முடியாது.


தசைகளின் மாற்றம் : உடற்பயிற்சின்போது இலகுவாக இருக்கும் உடலின் தசைகளின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக, தசைகள் சுருங்குவதை கவனிக்கலாம். ஒருமுறை உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்கும்போது, பழைய நிலையை அடைவதற்கு நீங்கள் நீண்ட காலம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். முன்பு இருந்ததைவிட இருமடங்கு வொர்க்அவுட் செய்ய வேண்டியிருக்கும்.