நம் வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுகளின் அடிப்படையில் நமது உடலில் உள்ள புரத சத்து வித்தியாசப்படுகிறது. நாம் அனைவருக்கும் வெவ்வேறு அளவிலான புரத தேவைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தினமும் உடற்பயிற்சி செய்பவருக்கு, உட்கார்ந்தே இருக்கும் மனிதனை விட ஒரு நாளைக்கு அதிக புரதம் தேவைப்படும். புரத சத்து குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து போல்ட்ஃபிட்டின் நிறுவனர் பல்லவ் பிஹானி கூறிய விஷயங்களை நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
கொழுப்பை குறைக்க முடியாது : சில உடல் எடையை குறைக்க விரும்பி தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடுவது, டயட்டில் இருப்பது என இடைவிடாமல் போராடி வருவார்கள். ஆனாலும் உடலில் எவ்வித வித்தியாசத்தையும் காண முடியாது. இதற்கு புரதம் பற்றாக்குறையும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் போதுமான புரதத்தை உட்கொள்ளாதபோது உங்கள் உடலால் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியாது. இதன் விளைவாக நீங்கள் கொழுப்பை எரிப்பதற்கு பதிலாக உங்கள் தசைகளை இழக்க வழிவகுக்கிறது. குறைந்த புரத உட்கொள்ளல் உங்கள் ஆற்றல் அளவையும் குறைக்கக்கூடும், இதனால் நீங்கள் உடலில் சத்து இல்லாதது போல உணர்வீர்கள். எனவே நீங்கள் போதுமான அளவு புரத சத்தை தினமும் எடுத்து கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நிலையற்ற மனநிலை : நமது மனநிலைக்கு காரணமான பல்வேறு வகையான ஹார்மோன்கள் மற்றும் நரம்புகளின் இயக்கத்தை ஒருங்கிணைப்பதற்கு புரதம் முக்கியமானது. எனவே புரத சத்து பற்றாக்குறை நிலையற்ற மனநிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிச்சல் , கோபம், வெறுப்பு என நிலையற்ற உணர்வுகள் ஏற்படும். செரோடோனின் என்ற மகிழ்ச்சியாக உணரக்கூடிய ஹார்மோன்கள் புரதச்சத்து குறைபாட்டால் மந்தமாகிறது. இதன் விளைவாக நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்வீர்கள்.
அடிக்கடி பசி : நம் உடலுக்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும்போதெல்லாம் நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள் போதிய அளவு புரதத்தை எடுத்து கொள்ளாத போது, இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. இதனால் உங்கள் உடல் பசியை தூண்டுகிறது. உங்கள் இரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதை உறுதிப்படுத்த புரதம் நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ளுங்கள். பருப்பு வகைகளான பாதாம்,வேர்க்கடலை, பிஸ்தா, முந்திரி, பால், கொண்டைக்கடலை, சோயா வகைகள், கோதுமை, ராகி, போன்றவற்றில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளது. அசைவ உணவுகளில் முட்டை, இறைச்சி, மீன், நண்டு போன்றவற்றில் அதிக அளவில் புரதம் நிறைந்துள்ளது.
எலும்பு வலிமை : எலும்பு வலிமைக்கு கால்சியம் அவசியம், ஆனால் நமது எலும்புகளில் 50 சதவீத ஆரோக்கியம் புரதங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? வைட்டமின் டி மற்றும் கால்சியத்துடன், எலும்பு ஆரோக்கியத்திற்கு புரத சத்தும் முக்கியமானது. வயதான நபர்களின் எலும்பு அடர்த்தியைப் பாதுகாப்பதில் புரதம் பெரும் பங்கு வகிக்கிறது. உங்களின் மூட்டுக்கள் ஏராளமான தசைகள் மற்றும் ஜவ்வுப்பகுதி நிறைந்த ஒன்று. ஆரோக்கியமான மூட்டுகளுக்கு புரதச்சத்து மிக மிக அவசியம்.
தோல் பிரச்னை, முடி உதிர்தல் : உங்கள் தோல், முடி மற்றும் நகங்கள் புரதத்தால் ஆனவை, எனவே இயற்கையாகவே புரதத்தின் குறைபாடு அவை மீதும் பிரதிபலிக்கும். கடுமையான புரத குறைபாடு சருமம் சிவத்தல், நகங்கள் சிதைவு, வலிமையற்ற நகங்கள் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். மேலும் முடி உதிர்வு, முடி மெலிதல் மற்றும் உடையக்கூடிய நகங்கள் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். வீக்கம் மற்றும் வீங்கிய சருமத்திற்கு வழிவகுக்கும் எடிமா, புரத சத்து குறைபாட்டின் மற்றொரு அறிகுறியாகும்.