விடுமுறை காலம் வந்துவிட்டாலே போதும் குடும்ப உறவுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விருந்து சாப்பிட்டு மகிழ்வது, உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு வருவது மற்றும் விதவிதமான உணவுகளை ஆன்லைன் ஆர்டர் செய்து சாப்பிடுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உடல் எடையை பராமரிக்க விரும்புகிறவர்கள், விடுமுறை உற்சாகத்தில் மிக அதிகமாக சாப்பிடுவார்கள்.
அதிகப்படியான உணவு மற்றும் மோசமான உணவுத் தேர்வுகளின் இந்தச் செயல், உடலில் நீர்ப்பிடிப்பு காரணமாக வீக்கம் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது உங்கள் ஆரோக்கியமான உணவுத் திட்டங்களையும் சிதைத்துவிடும். அதற்காக உங்கள் விடுமுறை தின விருந்துகளை சாப்பிடக்கூடாது என்று அர்த்தமல்ல. இதுபோன்ற சமயங்களில் நீங்கள் சற்று கவனமாக இருக்கவும் ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்ளவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். எனவே இந்த விடுமுறை காலத்தில் சாப்பிடும் போது நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
பட்டினியாக இருக்கக்கூடாது: நீங்கள் இரவு உணவு விருந்திற்கு வெளியே செல்ல இருக்கிறீர்கள் என்றால், அதற்காக காலை முதல் நாள் முழுவதும் பட்டினி கிடக்காதீர்கள். மாலையில் வெளியில் சென்று சாப்பிடும் திட்டம் இருக்கும்போது, நாள் முழுவதும் எதையும் சாப்பிடாமல் இருப்பது அல்லது குறைவாக சாப்பிடுவது நல்லது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இது கலோரி எண்ணிக்கையை பராமரிக்க உங்களுக்கு உதவாது. மாறாக அது உங்களை அதிகமாக சாப்பிட வைக்கும். நீங்கள் ஒரு வழக்கமான உணவை விட அதிகமாக உட்கொள்ள நேரிடலாம். இது உங்களுக்கு அசௌகரிய உணர்வை ஏற்படுத்தலாம்.
வெளியே செல்லும் முன் ஏதாவது சாப்பிடுங்கள் : நீங்கள் விடுமுறை காலங்களில் விருந்துக்கு வெளியே செல்வதற்கு முன் ஏதாவது சாப்பிட்டு செல்லுங்கள். அதற்காக வயிற்றை நிரப்பும் அளவுக்கு கனமான உணவுகளை உட்கொள்ள வேண்டாம். ஆனால் விருந்தில் உணவை அதிகமாக உட்கொள்வதைத் தடுக்கும் அளவுக்கு நிரப்ப வேண்டும். ஒரு பழம், ஒரு கிண்ணம் தயிர் சாதம் அல்லது தயிர் ஆகியவை உங்கள் அன்றைய பெரிய உணவுக்கு முன் சாப்பிடுவதற்கு சில ஆரோக்கியமான உணவு விருப்பங்களாக இருக்கும்.
நீரேற்றமாக இருங்கள் : விருந்தில் அதிகப்படியான உணவு சாப்பிடுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஒரு நாளில் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாதது. போதுமான அளவு தண்ணீர் அருந்துவது நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது மற்றும் உணவை ஆர்டர் செய்யும் போது ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்ய உதவுகிறது. நீங்கள் நீரிழப்புடன் இருக்கும்போது, உங்கள் மனம் அதை பசியின் அறிகுறியாக மாற்றி அதிக உணவை சாப்பிடத்தூண்டும். குளிர்காலத்தில் மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. ஏனெனில் அந்த சமயங்களில் பெரும்பாலும் தாகத்தை உணர்வதில்லை. இது அவர்களை அதிகமாக சாப்பிட வைக்கிறது.
உங்களுக்கான உணவை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள் : உங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவது பரவாயில்லை. ஆனால் நீங்கள் வரம்பிற்குள் சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதனுடன் சில ஆரோக்கியமான விருப்பங்களையும் ஆர்டர் செய்யுங்கள். அதேபோல உங்கள் தட்டில் எல்லாவற்றையும் போதுமான அளவு சேர்க்கவும். கீரைகள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து என உங்கள் தட்டில் இவை அனைத்தும் இருக்க வேண்டும்.
உங்கள் உணவை ரசியுங்கள் : சாப்பாடு விஷயத்தில் திருப்தியாக உணரவைப்பது இருப்பது சுவைதான். எனவே, அவசரமாக ஆர்டர் செய்வதை விட அல்லது வெவ்வேறு உணவுகளை முயற்சிப்பதை விட, நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றை ஆர்டர் செய்து ருசித்து மகிழலாம். அது ஒரு டிஷ்சாகவோ அல்லது உணவுகளாகவோ இருக்கலாம். நீங்கள் விரும்பிய உணவை மெதுவாக சாப்பிட்டு, ஒவ்வொரு கடியையும் அனுபவித்து மகிழுங்கள். நீங்கள் உங்கள் உணவில் திருப்தி அடைந்தால், நீங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என ஏங்க மாட்டீர்கள்.