தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த காலகட்டத்தில் வீட்டில் டிவி, அலுவலகத்தில் கம்ப்யூட்டர், ஓய்வு நேரங்களில் மொபைல் ஃபோன்கள் என ஏதேனும் ஒரு டிஜிடல் ஸ்கிரீனில் நம் நேரத்தை அதிகமாக செலவிடுகிறோம். அதிலும் நம்மில் பல பேர் காலை எழுந்தவுடன் முதலில் முழிப்பது, மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு கடைசியாக பார்ப்பது மொபைல் ஃபோனில் தான். இவ்வாறாக அதிகளவில் கண்களுக்கு அழுத்தம் கொடுப்பதனால்தான் இந்த காலத்தில் பல பேர் பார்வை குறைபாடு, கண்ணெறிச்சல், கண் சிவத்தல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு தினசரி செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தொலைவில் இருந்து பாருங்கள் : கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது மொபைல் ஃபோனை பயன்படுத்தும் பொழுது கண்களுக்கு நெருக்கமாக வைக்காமல் சிறிது தொலைவில் வைத்துப் பார்ப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல் பயன்படுத்தும் போது 20 நிமிடத்திற்கு ஒருமுறை தொலைவில் இருக்கும் ஒரு பொருளை 20 விநாடிக்கு பாருங்கள். மேலும் தவறாமல் அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள்.
கண்களுக்கு பயிற்சி : உடல் வலிமைக்கும் நன்றாக இயங்குவதற்கும் எப்படி பயிற்சி அவசியமோ அதுபோல கண்களின் ஆரோக்கியத்திற்கும் கட்டாயம் பயிற்சி செய்ய வேண்டும். கட்டை விரலை முகத்தில் இருந்து 10 அங்குல தூரத்தில் நீட்டி 10 விநாடிகளுக்கு அதில் கூர்ந்து கவனம் செலுத்துங்கள். அதன்பின் விரலை சிறிது தூரமாகவும் முகத்திற்கு அருகிலும் மாறிமாறிக் கொண்டு வர வேண்டும். மிகவும் எளிதான இந்த பயிற்சியை செய்வதன் மூலம் கண்களின் பார்வை குறைபாடு அவ்வளவு எளிதில் ஏற்படாது.
கண் இமைகளுக்கு மசாஜ் : நாள் முழுவதும் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துவிட்டு இரவு தூங்க செல்லும் முன் கண்களை ரிலாக்ஸாக்க ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துஅதில் காட்டன் பேடை நனைத்து கண்களின் மீது மெதுவாக அழுத்தி கண் இமைகளை மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கண்கள் ரிலாக்ஸாகி நல்ல உறக்கத்தை வரவழைக்கும்.