பெண்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே சீராக இருக்க சுகாதராமான மற்றும் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி முக்கியம். இரும்புச் சத்துக் குறைபாடு இல்லை, ஆரோக்கியமான கருப்பை, நீர்க்கட்டிகள் இல்லை, ஆகியவற்றை ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி உறுதிப்படுத்தும். ஆனால் மாதவிடாய் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்கொள்கிறார்கள்.
இதனால் பல வகையான பாதிப்புகள் ஏற்படலாம். மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்த உலக சுகாதார நிறுவனம் பல்வேறு விழிப்புணர்வு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உலக மாதவிடாய் சுகாதார தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பீரியட்ஸ் ஏற்படும் நாட்களில் நீங்கள் பின்வரும் தவறுகளை செய்யக்கூடாது.
மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கமல் இருப்பது
ஆரோக்கியமான மாதவிடாய் மற்றும் இயல்பான, சராசரி மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்கள் ஆகும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு இந்த சராசரி சுழற்சி என்பது 25 நாட்கள் ஆகவும் இருக்கலாம் அல்லது 35 நாட்களாகவும் இருக்கலாம். ஒவ்வொரு பெண்ணின் உடல் நிலையை பொறுத்து சராசரி நாட்கள் மாறுபடும். எனவே உங்களுடைய மாதவிடாய் சுழற்சி உங்கள் சராசரி நாட்களின் அடிப்படையில் ஏற்படுகிறதா என்பதை அவசியமாக கண்காணிக்க வேண்டும். இது உங்களுடைய கருவுறும் தன்மையை உறுதிப்படுத்துகிறது. மேலும், மாதவிடாய் தாமதமாவதால் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என்பதையும் கண்டறிய உதவும்.
சானிடரி பேடுகளை மாற்றாமல் இருப்பது:
மாதவிடாய் காலத்தில் நீங்கள் டாம்பான் அல்லது சானிடரி பேடுகளைப் பயன்படுத்தும் பொழுது, குறைந்தது 4 மணி நேரத்துக்கு ஒரு முறை அவசியம் மாற்ற வேண்டும். உங்களுக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் சரி, நீங்கள் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை பேடு மாற்றுவது மிகவும் அவசியம். இதனால் உங்களுக்கு அலர்ஜி மற்றும் தொற்று ஏற்படாமல் இருக்கும்.
நிறைய காஃபி அல்லது காஃபீன் பானங்கள் குடிப்பது:
எனர்ஜடிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக பல பெண்களும் பீரியட்ஸ் நாட்களின் போது நிறைய காஃபி குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். அதைத் தவிர்க்க வேண்டும். காஃபீன் உடலின் நீர்ச்சத்தை குறைப்பதோடு, பீரியட்ஸ் வலியையும் அதிகரிக்கும். இதைத் தவிர்த்து, பீரியட்ஸ் நாட்களில் ஜன்க் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.