கர்ப்பம் பெண்களின் உடலை பல வழிகளில் மாற்றுகிறது. பெண்கள் கருத்தரிப்பது என்பது அவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான அம்சமாகும். பொதுவாக கடைசி மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து கர்ப்ப காலம் கணக்கிடப்படுகிறது. சரியான பிரசவ காலத்தை தெரிந்துக் கொள்ள, கடைசியாக உங்களுக்கு பீரியட்ஸ் எப்போது ஆனது என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதுவும் முதல் பிரசவம் என்றால் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் வித்தியாசமாகவும், சந்தேகத்துடனும், விளங்காத புதிராக இருக்கும். கர்ப்பகாலத்தில் இயற்கையாக ஏற்படும் சில சின்ன பிரச்சினை கூட பெரிய பிரச்சினையாக தோன்றும்.
அதே போல சில அரிய உடல்மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. ஆகையால் கருத்தரிக்கவேண்டும் எனத் திட்டமிடும் போதிலிருந்தே சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக கர்ப்பகாலத்தில் கருப்பை வளர்த்து முன்னே தள்ளும்போது உடல் சமநிலையை இழந்து தடுமாறும். இதனால் முதுகு வலி வரக்கூடும். கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்கள் கருப்பை வளர்ச்சியால் அழுத்தப்படுவதால் கால்கள் வலிக்கும், வாசனைகளை முகர்ந்தால் ஒத்துக்கொள்ளாமல் அவ்வப்போது தலைவலி போன்றவை வரக்கூடும்.
கர்ப்பம் தரித்த பிறகுதான் மார்பகத்தின் வளர்ச்சி முழுமையடையும். நிறமாற்றங்கள் ஏற்படும். இரத்த அழுத்தம் அந்தப் பகுதிக்கு அதிகம் செல்வதால் இரத்த நாளங்கள் வீங்கி தொட்டாலே வலிக்கும். மார்பகப்பகுதிகளைச் சுற்றி சின்னச்சின்ன முடிச்சுகள் தோன்ற ஆரம்பிக்கும். இதெல்லாம் மார்பக மாற்றங்கள். அதேபோல, ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிறகும் பெண்கள் மேலும் சில மாற்றங்களை சந்திக்கிறார்கள். அவை என்ன என்பது குறித்து காண்போம்.