யோகா பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா? என்பது உங்களுக்குள் எழும் கேள்வியாக இருக்கலாம். ஏனென்றால், 108 சூரிய நமஸ்கார பயிற்சிகளை செய்தால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்பது இப்போதைக்கு டிரெண்டாகவும் இருக்கிறது. ஆனால், உடல் எடையை குறைக்க எல்லோரும் சூரியநமஸ்காரம் செய்ய வேண்டுமா? என்றால், இல்லை. பிரணாயாமா செய்யும்போது கிடைக்கும் பலன் பக்ஷித்திரிகா செய்யும்போதும் கிடைக்கும். வயிற்றில் இருக்கும் தொப்பை உடல் எடை குறைப்பதில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதிகப்படியான கார்டிசோல், லிம்பாய்டு திசுக்களின் நெரிசல் அதிகரிப்பு, குடல் நுண்ணுயிரிகளில் பன்முகத்தன்மை குறைவு, மோசமான ஹார்மோன் செயல்பாடுகள் ஆகியவையும் தொப்பைக்கான அறிகுறியாக இருக்கலாம். கடுமையான பயிற்சிகளை செய்வதுகூட உங்களுக்கு களைப்பாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் 5 யோகாவை முயற்சி செய்யுங்கள். உடல் எடை குறைவதுடன், ஆரோக்கிய மேம்பாட்டுக்கும் உதவியாக இருக்கும்.
சர்வங்காசனம்: கர்ப்பப்பை ஸ்போண்டிலோசிஸ் அல்லது கழுத்துப் பகுதியில் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால் சர்வங்காசனத்தை நீங்கள் செய்யலாம். விரிப்பில் மல்லாந்து படுத்துத் தலைக்கு மேல் கைகளை நீட்டவும். பின்னர் கால்கள் மற்றும் இடுப்பு என மெதுவாக மேலே உயர்த்துங்கள். முழங்கைகளைத் தரையில் ஊன்றி உடலை தாங்கவும். உடலின் அனைத்து எடையும் தோளுக்குக் கொண்டுவரவும். அதே சமயத்தில் சுவாசம் சீராக இருக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை இந்த நிலையில் இருந்து பழைய நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை தினமும் ஒரு முறை மட்டும் செய்தால் போதுமானது. செரிமான மண்டலம், லிம்பாடிக் மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மன அமைதியை உருவாக்கும் இந்த ஆசனம், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. முறையான ஆலோசனைப்படி செய்ய வேண்டும்.
தனுரசனா: வயிற்று பகுதி மற்றும் முகம் தரையை பார்த்தவாறு படுத்துக் கொள்ள வேண்டும். உடலை வில்போல் வளைத்து, இரு கால்களையும், உங்கள் கைகளைக் கொண்டு பிடித்துக் கொள்ளுங்கள். நெஞ்சுப் பகுதியானது விரியும். உங்களால் முடிந்தவரை அந்த நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புங்கள். முதுகு பகுதியில் இருக்கும் வலிகள் சரியாகும். கல்லீரல், கணையத்துக்கு சிறந்த பயிற்சியான தனுரசனா, செரிமான பிரச்சனைகளைப் போக்கி, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. சுவாசப் பிரச்சனைகளை சீராக்குகிறது.
திரிகோணாசனா: தரைவிரிப்பில் கால்களை அகலமாக வைத்து ஊன்றி, பக்கவாட்டில் நீட்டி, சுவாசத்தை உள்ளிழுத்து வைத்துக் கொண்டு பின் மெதுவாக சுவாசத்தை வெளிவிட்டவாறே குனிந்து வலது கையால் இடது காலைத் தொடவும். இப்பொழுது, இடது கைவானேக்கி உயர்ந்து இருக்க வேண்டும். இது தான் திரிகோணாசனம் நிலையாகும். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி இடது கையால் வலது காலைத் தொடவும். இப்போது, வலது கை வானோக்கி உயர்ந்து இருக்க வேண்டும். இம்மாதிரி மாற்றி மாற்றி கைகளால் கால்களைத் தொட வேண்டும். இம்மாதிரி இரு பக்கமும் மூன்று மூன்று முறை மாறி மாறிச் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை முறையாக செய்தால் தொப்பை, கொழுப்புகள் குறையும். இடுப்பு பகுதி அழகான வடிவமைப்பை பெறும்.
நவுகாசனம்: வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பு மற்றும் தொப்பையை குறைக்க செய்யக்கூடிய மிக எளிமையான பயிற்சிகளில் இதுவும் ஒன்று. தரையில் கால்களை முன்னோக்கி நீடியவாறு அமர்ந்திருக்க வேண்டும். பின்னர், கைகள் இரண்டையும் நேராக நீட்டியவாறு, அமர்ந்த நிலையில் கால்களை சேர்த்து மேல்நோக்கி தூக்க வேண்டும். வயிற்று தசைகளின் இறுக்கத்தை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக, தொப்பையைக் குறைக்க உதவும் மிகச்சிறந்த பயிற்சி.
காதி சக்ராசனம்: இரண்டு கால்களையும் இரண்டு அடி தள்ளி வைத்து நிற்கவும். மூச்சை உள்ளிழுத்து கைகளை பக்கவாட்டில் உயர்த்தவும். மூச்சை வெளிவிட்டு உடலை இடது பக்கம் திருப்பவும். வலது கையை இடது பக்க தோள்பட்டையில் வைக்கவும். இடது கை பின் உடலைச் சுற்றி வலது பக்க இடுப்பை பற்றியவாறு இருக்க வேண்டும்.இரண்டு நொடிகள் மூச்சை நிறுத்தி பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இதே முறையில் அடுத்த பக்கம் செய்யவும். இந்தப் பயிற்சியாறனது இடுப்பு, முதுகின் பின்பகுதி இருக்கும் கொழுப்புகளை கரைப்பதுடன், தொப்பையையும் குறைக்கும். அடிவயிற்றில் இருக்கும் இறுக்கத்தையும் போக்குகிறது.